காசா மருத்துவமனை தாக்குதலில் இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார்
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அந்த வகையில், இஸ்ரேலுக்கு தமது ஆதரவு நேரில் தெரிவிப்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டுக்கு சென்றுள்ளார். முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் என பலரும் நேரில் சென்று இஸ்ரேலுக்கு ஆதரவு கரம் நீட்டிய நிலையில், அதிபர் ஜோ பைடனும் நேரில் சென்று இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் சென்ற ஜோ பைடனை, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் அழைத்து செல்லப்பட்டார். அதன்பின்னர், இரு தலைவர்களும் போர் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமெரிக்க ஜோ பைடன், “காசா மருத்துவமனை மீதான தாக்குதலால் நான் மிகுந்த வேதனையும், அதேநேரம் கோபமும் அடைந்துள்ளேன். என்னை பொறுத்தவரையில், மருத்துவமனை தாக்குதலை இஸ்ரேல் செய்யவில்லை. மாறாக, வேறொரு குழு இதை செய்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.” என்றார்.
ஹமாஸ் தாக்குதலை எதிர்கொள்ள இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும் என்ற அவர், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை விட ஹமாஸ் மோசமானது. ஹமாஸ் தாக்குதலில் 31 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும்; பாலஸ்தீன மக்களை ஹமாஸ் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, பாலஸ்தீனத்தின் காசா நகரில் அமைந்துள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. போர் விதிமுறைகளை தொடர்ந்து இஸ்ரேல் மீறி வருவதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என காசா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது. இஸ்லாமிய ஜிகாத் அமைப்பே இதற்குக் காரணம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.
Egypt Gaza border crossing: இஸ்ரேல் செல்லும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்; காத்திருக்கும் அதிர்ச்சி!!
மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை, அரபு நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. காசா மருத்துவமனையில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறித்து அறிந்ததும் அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்ததாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இஸ்ரேல் போய் இறங்கியது, மருத்துவமனை மீதான தாக்குதலை இஸ்ரேல் காரணமல்ல என அந்நாட்டுக்கு ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் 5 மணி நேரம் தங்கியிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்சிசி, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்துவதாக இருந்தது. ஆனால், மருத்துவமனை தாக்குதலை அடுத்து, அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தக் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ரஷ்யா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம், மொசாம்பிக், காபோன் ஆகிய 5 நாடுகள் ஆதரவு அளித்தன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் ஆகிய 4 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 6 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. போதிய வாக்குகள் கிடைக்காததால் ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.