இந்தியா கொடுத்த அழுத்தத்தின் காரணமாக புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மசூத் அசாரின் சகோதரர், மகன் உட்பட 44 தீவிரவாதிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா கொடுத்த அழுத்தத்தின் காரணமாக புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மசூத் அசாரின் சகோதரர், மகன் உட்பட 44 தீவிரவாதிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படைத்தாக்குதலில் 40 சிஆர்பிஃஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சர்வதேச நாடுகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தனர். இதைதொடர்ந்து, ஜமாத்-உத்-தவா பயங்கரவாத இயக்கம் மற்றும் பலாக்-ஐ-இன்சானியட் அறக்கட்டளை ஆகிய 2 அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு சமீபத்தில் தடை விதித்துள்ளது. இந்த அமைப்புகளின் வங்கி கணக்குகளும், அசையாச் சொத்துக்களும் முடக்கப்பட்டது.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 44 பேரை பாகிஸ்தான் அரசு நேற்று அதிரடியாக கைது செய்துள்ளது. இதில், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் நிறுவனர் மசூத் அசாரின் சகோதரன் முப்தி அப்துர் ராப், அவரது மகன் ஹமாத் அசாரும் கைதாகி உள்ளனர். இது குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷகாரியார் கான் அப்ரிடி கூறுகையில், ‘‘அரசு மேற்கொண்ட நடவடிக்கையில், முப்தி அப்துர் ராப், ஹமாத் அசார் உட்பட 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்தியா அளித்த ஆவணத்தில் முப்தி, ஹமாத் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
எந்த அழுத்தத்தினாலும் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேசிய செயல் திட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட அனைத்து அமைப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது. இன்னும் 2 வாரத்திற்கு கைது நடவடிக்கை தொடரும். யாருக்கு எதிராகவும் தீவிரவாத செயல்புரிய பாகிஸ்தான் மண்ணை பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்ற கொள்கையை இந்த அரசு கொண்டுள்ளது’’ என்றார்.