வெயில் தாங்க முடியல: ஜப்பான் காரன் கண்டுபிடித்த கூலிங் ட்ரெஸ்!

By Manikanda Prabu  |  First Published Aug 18, 2023, 8:41 PM IST

கோடை வெயிலை சமாளிக்க குளிர்ச்சியூட்டும் உடைகளை ஜப்பானியர்கள் கண்டுபிடித்துள்ளனர்


ஜப்பானில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. மற்ற நாடுகளைப் போலவே, ஜப்பானிலும் கோடை வெயிலின் தாக்கல் அதிகமாகவே உள்ளது. 100 ஆண்டுகளில் மிக அதிகமாக வெப்பம் ஜப்பானில் கடந்த ஜூலை மாதம் பதிவானது. வெப்பத் தாக்குதலால் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் உயிரிழந்துள்ளனர். வெயில் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 50,000க்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர்.

இதனை சமாளிக்கும் வகையில், புதிய கண்டுபிடிப்புகளுக்கும், தொழில்நுட்பத்துக்கும் பெயர் போன ஜப்பான் காரர்கள் குளிர்ச்சியூட்டும் புதிய ஆடைகளை கண்டிபிடுத்துள்ளனர். அதன்படி, கோடை வெப்பத்தை மக்கள் சமாளிக்க உதவும்  வகையில், உள்ளமைக்கப்பட்ட ஃபேன்கள், கழுத்து பகுதியில் குளிர்ச்சியான காற்றை செலுத்தும் கூலர்கள் கொண்ட ஜாக்கெட்டுகள், குளிர்ச்சியை ஊட்டும் டி-ஷர்ட்கள் தயாரிக்கப்பட்டு அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

கட்டுமானத் தொழிலாளர்களுக்கான ஆடைகளைத் தயாரிக்கும் வொர்க்மேன் எனும் நிறுவனம் ஒன்று, தேவை அதிகரிப்பின் காரணமாக, 2020 ஆம் ஆண்டிலேயே ஃபேன் பொருத்தப்பட்ட ஜாக்கெட்டுகளை அறிமுகப்படுத்தியது. அந்த ஜாக்கெட்டுகளின் செயல்முறை மிகவும் எளிமையானது. ரிச்சார்ஜபிள் பேட்டரி மூலம் இயக்கப்படும் இரண்டு மின்சார, உள்ளங்கை அளவிலான மின்விசிறிகள் ஜாக்கெட்டின் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன. அவை காற்றை உள்இழுத்து பின்னர் குளிர்ச்சியான காற்றை அதனை அணிந்திருப்பவருக்கு வழங்குகிறது. இந்த ஜாக்கெட்டுகள் 12,000 முதல் 24,000 யென் வரை விற்பனை செய்யப்படுகிறது.

வெப்பத்தை சமாளிக்கும் வகையில் இத்தகைய ஜாக்கெட்டுகளை அதிகமானோர் ஆர்வமுடன் வாங்குவதாக வொர்க்மேன் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் யுயா சுசுகி தெரிவித்துள்ளார். “வீட்டில் மின்விசிறியுடன் இருக்கும்போது நீங்கள் குளிர்ச்சியாக இருப்பதைப் போலவே இந்த ஜாக்கெட் அணிவதன் மூலம் நீங்கள் குளிர்ச்சியாக உணரலாம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய கோடை காலம் வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும். ஆனால் கடந்த ஜூலையில் அதிகமாக  வியர்க்கும் வகையில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. சராசரி வெப்பநிலை 28.7 செல்சியஸ் ஆக இருந்தது. இது அந்நாட்டில் 1875ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலையாகும்.

மாணவர்கள் தற்கொலையை தடுக்க சீலிங் ஃபேனில் நூதன சாதனம்: மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

மொனாக்கோவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது முதியவர்கள் மக்கள்தொகை கொண்ட நாடாக இருக்கும் ஜப்பானில், அதிகரிக்கும் வெப்பம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், கடந்த ஐந்து ஆண்டுகளில் வெப்பம் தொடர்பான உயிரிழப்புகளில் 80 சதவீதம் மூத்த குடிமக்கள் உயிரிழந்துள்ளனர்.

வெப்ப அலையாக் பலர் இறக்கின்றனர் என MI கிரியேஷன்ஸின் நோசோமி டகாய் கூறியுள்ளார். இந்த நிறுவனம் தொழிலாளர்களுக்கு கழுத்தை ஜெல் மூலம் குளிர்விக்கும் ட்யூபுகளை விற்பனை செய்து வருகிறது. இந்த ட்யூப் 2500 யென்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ட்யூபுகளை பிரிட்ஜில் 20 நிமிடங்கள் வைத்து பயன்படுத்த வேண்டும். இதை கழுத்தில் அணிந்தால் சுமார் ஒரு மணி நேரம் “உடல் முழுவதும் குளிர்ச்சியடையும்” என அவர் தெரிவித்துள்ளார்.

டோக்கியோவை தளமாகக் கொண்ட நிறுவனமான லிபர்ட்டா, குளிர்ச்சியாக உணர வைக்கும் டி-ஷர்ட்களை தயாரிக்கிறது. சைலிட்டால் போன்ற பொருட்களை பயன்படுத்தி அதன் மீது பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் மற்றும் வியர்வையுடன் அவை வினைபுரியும் போது உடலை குளிர்ச்சியாக உணர வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒசாகாவை தளமாகக் கொண்ட சிக்குமா எனும் நிறுவனம், மின் விசிறிகள் பொருத்தப்பட்ட அலுவலக ஆடைகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது.

click me!