அதனால் மே 4ம் தேதிக்கு பிறகு பெரும்பாலான ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்துவதாக பிரதமர் கியூசெப் கோண்டே அறிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸின் கோர வேட்டை 210க்கும் மேற்பட்ட நாடுகளை சின்னபின்னமாக்கியுள்ளது. முதன் முதலில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட சீனாவே தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி நிம்மதி பெருமூச்சு விட்டு வருகிறது. அதற்கு அடுத்த ஐரோப்பிய நாடுகளின் பக்கம் திரும்பிய கொரோனா வைரஸ், சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த நாடான இத்தாலியை ஆட்டிபடைத்தது.
கொரோனா தொற்று வைரஸ் தொற்று இதுவரை இத்தாலியில் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 675 பேருக்கு பரவியுள்ளது. இந்த கொடூரமான வைரஸால் 26 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். கொரோனா தொற்றால் சுவாசக் கோளாறு ஏற்பட்ட முதியவர்களே இத்தாலியில் அதிகம் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கடந்த 6 வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. கொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை புதைக்க கூட இடமில்லை என்று அந்நாட்டு பிரதமர் கதறியது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்தது. இந்நிலையில் தற்போது இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அதனால் மே 4ம் தேதிக்கு பிறகு பெரும்பாலான ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்துவதாக பிரதமர் கியூசெப் கோண்டே அறிவித்துள்ளார்.
அதன்படி கட்டுமான நிறுவனங்கள், உற்பத்தி தொழிற்சாலைகள் இயக்கவும், பார்கள், உணவகங்கள் ஆகியவை செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவை போலவே உணவகங்களில் சாப்பிட அனுமதி கிடையாது. பார்சல் மட்டுமே வழங்கப்படும். அதேபோல் இறுதிச்சடங்குகளில் பங்கேற்க 15 பேருக்கு மட்டுமே அனுமதி போன்ற சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.