உச்சகட்ட அபாயத்தில் இருக்கிறோம்.. இப்போதைக்கு ஊரடங்கு தளர்வு கிடையாது.. பிரிட்டன் பிரதமர் திட்டவட்டம்

Published : Apr 27, 2020, 05:58 PM IST
உச்சகட்ட அபாயத்தில் இருக்கிறோம்.. இப்போதைக்கு ஊரடங்கு தளர்வு கிடையாது.. பிரிட்டன் பிரதமர் திட்டவட்டம்

சுருக்கம்

பிரிட்டனில் இப்போதைக்கு ஊரடங்கு தளர்வு கிடையாது என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.  

சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் காட்டுத்தீயாய் பரவிவருகிறது. உலகளவில் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 

உலகளவில் அமெரிக்காவில் தான் பாதிப்பு படுமோசமாக உள்ளது. அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது. 55 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இத்தாலி, ஸ்பெய்ன், ஃப்ரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகள் தான் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

கொரோனா சமூக பெருந்தொற்று என்பதால் அதிலிருந்து மக்களை காக்க அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்திவிட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டுவருகின்றன. 

கொரோனா சாமானியர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை. அந்தவகையில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு ஐசியூவில் சிகிச்சை பெற்று சாவை பக்கத்தில் பார்த்து திரும்பிவந்தவர் தான் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன். கொரோனாவிலிருந்து மீண்டு ஓய்வில் இருந்த அவர், இன்று முதல் தனது பணியை தொடங்கிவிட்டார்.

உலகளவில் பொருளாதார அளவில், ஐந்தாவது பெரிய நாடு பிரிட்டன். ஆனால் கொரோனா ஊரடங்கால் கடும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது பிரிட்டன். பிரிட்டனில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 21 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் தீவிரம் அதிகமாக இருக்கும் பிரிட்டனில் ஊரடங்கு அவசியமாகிறது. 

பிரிட்டன் கடும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளதால் எப்போது ஊரடங்கு தளர்த்தப்படும் என்பது அந்நாட்டு மக்களின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், கொரோனாவிலிருந்து மீண்டு இன்று பணிக்கு திரும்பிய பிரதமர் போரிஸ் ஜான்சன், ஊரடங்கு தளர்வு பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது என்றார்.

இதுகுறித்து பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், எவ்வளவு விரைவாக அல்லது எப்போது ஊரடங்கு தளர்த்தப்படும் என்று இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. அவ்வளவு எளிதாக விரைவில் ஊரடங்கை தளர்த்த முடியாது. உங்கள்(மக்கள்) அவசரம் புரிகிறது. உங்கள் கவலையில் நானும் பங்கெடுக்கிறேன். ஆனால் பொருளாதாரத்தை மீட்க ஊரடங்கை தளர்த்தினால் அது பேராபத்தை ஏற்படுத்திவிடும்.

எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும்.  இப்போது ஊரடங்கை தளர்த்தினால் ரிஸ்க் ஆகிவிடும். அப்படி செய்தால் கொரோனாவின் இரண்டாவது அலை உயிர்களை காவுவாங்குவது மட்டுமல்லாமல் மிகப்பெரிய பொருளாதார பேரழிவையும் ஏற்படுத்தும். உச்சகட்ட அபாயத்தில் இருக்கிறோம். எனவே மக்களின் உயிர்களை காப்பதுதான் முக்கியம். அதனால் ஊரடங்கு தளர்வு கிடையாது என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

ஜப்பானை உலுக்கிய 7.5 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!
பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!