
ஈரானால் ஆதரிக்கப்படும் ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பதிலடி நடவடிக்கை எடுப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ஹவுதி குழுவினரால் ஏவப்பட்ட ஒரு ஏவுகணை இஸ்ரேலின் முக்கிய சர்வதேச விமான நிலையமான பென் குரியன் சர்வதேச விமான நிலையம் அருகே விழுந்தது. இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்பு இதைத் தடுக்கத் தவறியதால் இந்தத் தாக்குதல் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.
எக்ஸ் பதிவில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலின் பதிலடி ஒரே தாக்குதலில் முடிந்துவிடாது என்று நெதன்யாகு தெளிவுபடுத்தி இருக்கிறார். "அமெரிக்காவுடன் இணைந்து நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாங்கள் ஏற்கனவே அவர்களை குறிவைத்துள்ளோம், பதிலடி கொடுப்போம். அது ஒரே தாக்குதலில் முடிந்துவிடாது, பல தாக்குதல்கள் தொடரும்." என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
ஏமனின் ஈரான் ஆதரவு ஹவுதி குழு இந்த ஏவுகணைத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். கடந்த சில வாரங்களாக, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர், இதை அவர்கள் 'ஒற்றுமை நடவடிக்கை' என்று அழைக்கின்றனர்.
இஸ்ரேல் ஏற்கனவே காசாவில் ஹமாஸுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில், நெதன்யாகுவின் ஹவுதி குழுவுக்கு எதிரான அறிக்கை வெளியாகியுள்ளது. ஹவுதிகளுக்கு எதிராக துல்லியமான மற்றும் தீவிரமான வான்வழித் தாக்குதல்கள் நடத்த சிறப்பு ராணுவ நடவடிக்கை திட்டமிடப்பட்டு வருகிறது.
செங்கடல் பகுதியில் வர்த்தகப் போக்குவரத்தைச் சீர்குலைக்கும் தாக்குதல்களுக்காக, ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து அமெரிக்காவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.