
இஸ்ரேலின் முக்கிய விமான நிலையம் அருகே நடந்த ஏவுகணைத் தாக்குதலால், டெல்லியில் இருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஞாயிற்றுக்கிழமை அவசரமாக மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவின் AI139 விமானம் தரையிறங்க ஒரு மணிநேரம் இருந்தபோது, ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய ஏவுகணை பென் குரியன் சர்வதேச விமான நிலையம் அருகே விழுந்தது. இதனால் ஏற்பட்ட பீதியால், விமானங்கள் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
ஏர் இந்தியாவின் விமானம் அபுதாபியில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாகவும், அங்கிருந்து டெல்லிக்குத் திரும்பும் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மே 6ஆம் தேதி வரை டெல் அவிவ் செல்லும் அனைத்து விமானங்களையும் நிறுத்திவைப்பதாகவும் அறிவித்துள்ளது.
“மே 4, 2025 அன்று டெல்லியில் இருந்து டெல் அவிவ் சென்ற AI139 விமானம், பென் குரியன் விமான நிலையத்தில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு அபுதாபிக்குத் திருப்பிவிடப்பட்டது. விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கி டெல்லிக்குத் திரும்பும்” என்று விமான நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. விமானம் ஜோர்டானுக்கு மேல் பறந்துகொண்டிருந்தபோது திருப்பிவிடப்பட்டதாக விமானப் பாதைத் தரவுகள் காட்டுகின்றன. டெல் அவிவில் இருந்து டெல்லிக்குத் திரும்பும் விமானமும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
லுஃப்தான்சா குழுமம் மற்றும் TUS ஏர்வேஸ் உட்பட பல விமான நிறுவனங்கள் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து விமானங்களை ரத்து செய்துள்ளன. அமெரிக்க விமானங்கள் சில 90 நிமிடங்கள் வரை தாமதமாகியுள்ளன.
ஏவுகணை தாக்குதலில் விமான நிலையம் அருகே இருந்த நான்கு பேர் காயமடைந்ததாக இஸ்ரேல் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இருவர் தப்பி ஓட முயன்றபோது காயமடைந்தனர். முனையம் 3 அருகே, சாலையோரத்தில் உள்ள ஒரு தோப்பில் ஏவுகணை விழுந்தது. ஏவுகணை விழுந்த இடத்தில் ஆழமான பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆனால் விமான நிலையக் கட்டிடங்களுக்கு பெரிய சேதம் ஏற்படவில்லை.
இந்தத் தாக்குதல் குறித்துப் பேசியுள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட், ஏழு மடங்கு பெரிய அளவில் பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இதனிடையே, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்துப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, உயர் பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்திந்து ஆலோசனை நடத்துகிறார்.
விமான நிலைய வளாகத்திற்குள் ஏவுகணை விழுந்தது இதுவே முதல் முறை. ஜெருசலேம், டெல் அவிவ், ஹைஃபா மற்றும் வடக்கே நஹரியா வரை மத்திய இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் கேட்டன. ஏவுகணை ஏமனில் இருந்து ஏவப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதல் குறித்த முழு விவரங்களையும் அறிய விசாரணை நடக்கிறது.
இப்பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. காசாவில் ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த இஸ்ரேலிய அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஹவுதி கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மேலும் தாக்குதல்கள் தொடரலாம் என்று கூறப்படுகிறமது. தாக்குதல் நடந்ததை அடுத்து பென் குரியன் விமான நிலையத்தில் ஓடுபாதைகளில் பாதுகாப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. விமான நிலையத்திற்கு வரும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.