இதன் முதற்கட்ட முடிவுகள் படி 90 சதவீத நோயாளிகளின் நுரையீரல் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. அதாவது அவர்களின் நுரையீரலில் இருந்து காற்றோட்டம் மற்றும் பிராணவாயு பரிமாற்றத்தின் பணிகள் இயல்பு நிலையை எட்டவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள் கடுமையான நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகி இருப்பது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 90 சதவீத நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் உலக அளவில் 1 கோடியே 87 லட்சத்து 34 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7 லட்சத்து 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 1 கோடியே 19 லட்சம் பேர் இந்த வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். உலகிலேயே அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன. உலகத்துக்கே கொரோனா வைரஸ் பரப்பிய சீனாவில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அந்நாட்டில் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.
இதுவரை அந்நாட்டில் 84 ஆயிரத்து 491 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,630 பேர் உயிரிழந்துள்ளனர். வெறும் 810 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதில் 36 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சீனாவின் தொற்றுநோய் மையமாக இருந்த வுஹான் நகரத்தில் ஒரு பெரிய மருத்துவமனையில் இருந்து குணப்படுத்தப்பட்ட covid-19 நோயாளிகளின் குழுவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், 90 சதவீத நோயாளிகள் நுரையீரல் பாதிப்பு பிரச்சனைக்கு ஆளாகி இருப்பதாக தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் ஏற்கனவே வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களில் 5% பேர் மீண்டும் நோய்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். வுஹான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவின் இயக்குனர் பெங் ஜியோங் தலைமையிலான குழு ஏப்ரல் முதல் குணமடைந்து வரும் நூறு நோயாளிகளை தேர்வு செய்து, அவர்களின் உடல் நிலையை பரிசோதித்து வருகிறது. சுமார் 59 வயது உடையவர்கள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதன் முதற்கட்ட முடிவுகள் படி 90 சதவீத நோயாளிகளின் நுரையீரல் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. அதாவது அவர்களின் நுரையீரலில் இருந்து காற்றோட்டம் மற்றும் பிராணவாயு பரிமாற்றத்தின் பணிகள் இயல்பு நிலையை எட்டவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. 6 நிமிட நடைப் பயிற்சியின் அடிப்படையில் நோயாளிகளை பரிசோதித்ததில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 6 நிமிட இடைவெளியில் சுமார் 400 மீட்டர் தூரம் வரை மட்டுமே நடக்க முடிந்தது, ஆனால் ஆரோக்கியமான நபர்கள் 6 நிமிடங்களில் 500 மீட்டர் தூரத்தை கடக்க முடியும் என்பதை அவர்கள் கண்டறிந்தனர். பீஜிங் சீன மருத்துவ பல்கலைக்கழகத்தின், டோங்ஜெமின் மருத்துவமனையின் மருத்துவர், லியாங் டெங்சியோ மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட 3 மாதங்களுக்குப் பிறகும் குணமடைந்த நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் இயந்திரங்களின் ஆதரவு தேவை என தெரிவித்துள்ளார்.