அமெரிக்காவில் நாளை முதல் அமலாகிறது விசா சட்டத்திருத்தம்… காலாவதியான விசா வைத்திருப்பவர்களுக்கு ஆபத்து !!

By Selvanayagam PFirst Published Sep 30, 2018, 9:27 AM IST
Highlights

அமெரிக்காவின் விசா சட்டத்திருத்தம் நாளை முதல் அமலுக்கு வருவதால், காலாவதியான விசாக்களுடன் அங்கு குடியிருக்கும் இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அமெரிக்காவில் குடியேற்ற விதிகளை அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றார். அகதிகளாக நுழைபவர்களை தடுத்து நிறுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகளிடம் இருந்து அவர்களின் குழந்தைகள் தனியாக பிரிக்கப்பட்டு காப்பகத்தில் தங்க வைக்கும் திட்டத்தை அதிபர் டிரம்ப் செயல்படுத்தினார். இதற்கு அதிபரின் மனைவி உட்பட பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து குழந்தைகளை பிரிக்கும் முறை திரும்ப பெறப்பட்டது. 

இந்நிலையில் அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களை உடனடியாக சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என டிரம்ப் உறுதியான இருக்கிறார்.

சட்ட விரோதமாக யாராவது அமெரிக்காவில் குடியேறி  இருந்தது கண்டுபிடிக்கப்பட்டால் நீதிபதியோ அல்லது நீதிமன்ற வழக்குகளோ இன்றி உடனடியாக அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும்’ என்று ட்ரம்ப் கூறியுள்ளார். 

அதே நேரத்தில் ஹெச் 1 பி விசா வைத்திருப்போருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மனிதாபிமான அடிப்படையிலும், வெளிநாட்டவருக்கு வேலை வாய்ப்புகள் அளித்துள்ள தொழில் நிறுவனங்களின் நலன்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையிலும் இப்போதைக்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட மாட்டாது என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையல் விசா மறுக்கப்பட்டவர்கள் மற்றும் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு நாளை முதல் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும் என்று அமெர்க்க அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவின் விசா சட்டத்திருத்தம் நாளை அமலுக்கு வருவதால், காலாவதியான விசாக்களுடன் உள்ள இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!