
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் பொது இடத்தில் சிறுநீர் கழித்த ஒருவரைக் கண்டித்த 26 வயது இந்திய இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். பலியானவர் ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த கபில் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நடந்தது என்ன?
ஹரியானாவின் பரா கலா கிராமத்தைச் சேர்ந்த கபில், கடந்த 2022ஆம் ஆண்டு 'டுங்கி' (Dunki) என்ற சட்டவிரோத வழியில் சுமார் 45 லட்சம் ரூபாய் ($54,000) செலவில் அமெரிக்கா சென்றார். வெளிநாட்டில் இருந்து தனது குடும்பத்தினருக்கு நிதி உதவி செய்து வந்த இவர்தான், அந்தக் குடும்பத்தின் ஒரே வாரிசு.
கலிஃபோர்னியாவில் வசித்து வந்த கபில், பொது இடத்தில் ஒருவர் சிறுநீர் கழிப்பதைப் பார்த்து அவரைத் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், கபிலை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த கபில், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
நிர்கதியான விவசாயக் குடும்பம்
கபிலின் உறவினர் ஒருவர், "பொது இடத்தில் சிறுநீர் கழிக்க வேண்டாம் என்று கேட்டதற்காக கபில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்" என வேதனையுடன் தெரிவித்தார்.
கபிலின் குடும்பத்தினர் விவசாயம் செய்து வருகின்றனர். மகனை வெளிநாட்டிற்கு அனுப்ப தங்கள் சேமிப்பு முழுவதையும் செலவழித்த நிலையில், தற்போது அவரது உடலை இந்தியா கொண்டுவர நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாகக் கூறுகின்றனர். வெளியுறவுத்துறை தலையிட்டு தங்கள் மகனின் உடலை விரைந்து மீட்டுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.