
தொடர் தேர்தல் தோல்விகளைச் சந்தித்த ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, ஞாயிற்றுக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கு (LDP) இடையே ஒரு அரசியல் குழப்பத்தை உருவாக்கியுள்ளது.
பதவி விலகலுக்குக் காரணம்
68 வயதான ஷிகெரு இஷிபா கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் பதவியை ஏற்றார். அமெரிக்காவின் புதிய வரி விதிப்புகள், உயரும் விலைகள், அரிசி கொள்கையில் சீர்திருத்தங்கள், பிராந்திய பதற்றம் போன்ற பெரிய சவால்களை ஜப்பான் எதிர்கொண்டிருக்கும் நேரத்தில், பதவி விலகுவது ஒரு அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தும் என்று கூறி, ராஜினாமா செய்யாமல் இருந்தார்.
ஆனால், அவரது ஆளும் கூட்டணி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழந்தது. அதன் பிறகு, அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் கட்சிக்குள் வலுப்பெற்றன. திங்கள்கிழமை கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருந்த நிலையில், இஷிபா ராஜினாமா செய்துள்ளார்.
கட்சியின் கோரிக்கை
கட்சியின் மூத்த தலைவர்களான டாரோ அசோ மற்றும் சில அமைச்சர்கள் வெளிப்படையாகவே இஷிபா ராஜினாமா செய்ய வேண்டும் வலியுறுத்தினர். சனிக்கிழமை, வேளாண் அமைச்சர் ஷிஞ்சிரோ கொய்சுமி மற்றும் முன்னாள் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோரை இஷிபா சந்தித்து பேசியதாகவும், அப்போது அவர்கள் இருவரும் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே பதவி விலகும்படி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த தலைவர் யார்?
இஷிபாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, எல்.டி.பி கட்சி அவசர தலைமைத் தேர்தலை நடத்தவுள்ளது. புதிய பிரதமராகப் பதவியேற்க சாணே டகாயிச்சி மற்றும் ஷிஞ்சிரோ கொய்சுமி ஆகியோரின் பெயர்கள் அதிகம் பேசப்படுகின்றன. இதில் சாணே டகாயிச்சி, வங்கியின் வட்டி விகித உயர்வுகளை விமர்சித்து வருபவர். இஷிபா கடந்த ஆண்டு நடைபெற்ற கட்சித் தேர்தலில் டகாயிச்சியைச் சிறிய வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஷிஞ்சிரோ கொய்சுமி, இஷிபாவின் வேளாண் அமைச்சராகப் பணியாற்றியவர். கட்சியில் வேகமாக வளர்ந்து வரும் தலைவர்களில் ஒருவராகவும் பார்க்கப்படுகிறார்.
பொருளாதார நெருக்கடி
மீஜி யாசுதா ஆராய்ச்சி நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் கசுடாகா மாடா கூறுகையில், "தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு இஷிபாவின் ராஜினாமா தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. கொய்சுமி மற்றும் டகாயிச்சி ஆகியோர் அடுத்த தலைவர் பதவிக்கு வர வாய்ப்புள்ளது" என்று கூறினார். புதிய தலைவர் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்த உடனடியாக ஒரு தேர்தலை அறிவிக்கலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், கியோடோ நடத்திய கருத்துக்கணிப்பில், 55% மக்கள் இப்போது ஒரு உடனடித் தேர்தல் தேவையில்லை என்று கூறியுள்ளனர்.
பிரதமராக இஷிபாவின் கடைசி முக்கிய நடவடிக்கை, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்தது. இந்த ஒப்பந்தம், ஜப்பானின் 550 பில்லியன் டாலர் முதலீடுகளுக்கு ஈடாக, ஜப்பானிய பொருட்களின் மீதான டிரம்பின் வரியை 25%லிருந்து 15% ஆகக் குறைத்தது.