
இணைய யுகத்தில் ஆன்மீகப் பணியைச் செய்து, "இறைவனின் இன்ஃப்ளூயன்சர்" (God's Influencer) என்று அழைக்கப்பட்ட இத்தாலிய இளைஞர் கார்லோ அகுடிஸுக்கு (Carlo Acutis) புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. போப் லியோ தலைமையில் வாடிகனில் உள்ள புனித பீட்டர்ஸ் பசிலிக்காவில் நடைபெற்ற புனிதர் பட்டம் சூட்டும் நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதன் மூலம், கார்லோ அகுடிஸ் மில்லினியல் தலைமுறையில் இருந்து புனிதர் பட்டம் பெற்ற முதல் நபர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
அற்புதங்கள் நிகழ்த்திய கார்லோ
2006ஆம் ஆண்டு, தனது 15 வயதிலேயே லுகேமியா எனப்படும் இரத்தப் புற்றுநோயால் உயிரிழந்த கார்லோ, தனது குறுகிய வாழ்நாளில் தனது கணினித் திறமையைப் பயன்படுத்தி, கத்தோலிக்க விசுவாசத்தைப் பரப்புவதில் பெரும் பங்காற்றினார். குறிப்பாக, நற்கருணை தொடர்பாக உலகெங்கிலும் நடந்த 100-க்கும் மேற்பட்ட அற்புதங்களை ஆவணப்படுத்தி, அவற்றைப் பற்றி விளக்கும் ஒரு வலைத்தளத்தை உருவாக்கினார். இந்த வலைத்தளமானது, இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
புனிதர் பட்டத்திற்கான காரணங்கள்
கார்லோ புனிதர் பட்டம் பெறுவதற்கு அவரால் நடந்த இரண்டு அற்புதங்கள் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 2020ஆம் ஆண்டு, பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுவன் அரிய கணைய நோயால் பாதிக்கப்பட்டிருந்தான். அவன் கார்லோ அணிந்திருந்த ஒரு டி-ஷர்ட்டைத் தொட்டதும் குணமடைந்தான். இது கார்லோவின் முதல் அற்புதமாக அங்கீகரிக்கப்பட்டது.
2022ஆம் ஆண்டு, கோஸ்டாரிகா மாணவி ஒருவர் சைக்கிள் விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரது தாய் கார்லோவின் கல்லறையில் சென்று பிரார்த்தனை செய்த பிறகு, அந்த மாணவி முழுமையாகக் குணமடைந்தார். இந்த இரண்டு நிகழ்வுகளையும் வாடிகன் அற்புதங்களாக அங்கீகரித்ததைத் தொடர்ந்து, கார்லோவுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
கார்லோவின் எளிமையான வாழ்க்கை
கார்லோ அகுடிஸ் 1991ஆம் ஆண்டு லண்டனில் இத்தாலியப் பெற்றோருக்குப் பிறந்தார். சிறுவயதிலேயே ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட அவர், தனது 7 வயதில் முதல் நற்கருணையைப் பெற்ற பிறகு தினமும் திருப்பலியில் கலந்துகொள்ளத் தொடங்கினார். கணினி அறிவியல் துறையில் சிறந்து விளங்கிய கார்லோ, அதே சமயம் கால்பந்து விளையாடுவது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது எனச் சாதாரண இளைஞர் போல்தான் வாழ்ந்தார். ஆனாலும், தனது தொழில்நுட்பத் திறனை இறைப்பணிக்காகப் பயன்படுத்தினார்.
அவரது உடல் அசிசி நகரில் உள்ள புனித மேரி மேஜர் தேவாலயத்தில், ஜீன்ஸ் மற்றும் நைக் ஷூ அணிந்த நிலையில் கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டுள்ளது. அவருடைய மரணத்திற்குப் பிறகு, அவரது உடல் அழுகாமல் இருந்ததாகவும் சொல்லப்பட்டது. முகமும் கைகளும் மெழுகால் மூடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.