பிரிட்டன் பிரதமருக்கான போட்டியிலிருந்து பென்னி மோர்டான்ட் விலகியதையடுத்து, இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பிரதமராவது உறுதியாகியுள்ளது.
பிரிட்டனில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதையடுத்து, அடுத்த பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் பென்னி மோர்டாண்ட் ஆகிய இருவரும் இருந்தனர்.
பிரிட்டன் பிரதமருக்கான போட்டியிலிருந்து பென்னி மோர்டாண்ட் விலகியதையடுத்து, இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராகிறார்.
இதையும் படிங்க - Rishi Sunak Next PM:பிரிட்டனின் அடுத்த பிரதமர் வாய்ப்பு இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கிற்கு கிடைக்குமா?
இந்த ஆண்டில் மட்டும் பிரிட்டனில் 2 பிரதமர்கள் பதவி விலகியிருக்கின்றனர். ஒரே ஆண்டில் 2 பிரதமர்கள் பதவி விலகியது இதுவே முதல் முறை.
2019ம் ஆண்டு நடந்த பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் கான்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் தலைவர் போரிஸ் ஜான்சன் பிரதமரானார். அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் கொரோனா பாதிப்பால் கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளானது பிரிட்டன். அதன்விளைவாக விலைவாசி கடுமையாக உயர்ந்ததால், மக்கள் போராட்டங்களில் ஈடுபட, பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து விலகினார் போரிஸ் ஜான்சன்.
அதன்பின்னர் கடுமையான போட்டிக்கு பிறகு பிரிட்டன் புதிய பிரதமராக பொறுப்பேற்ற லிஸ் ட்ரஸ், பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க சில பொருளாதார மாற்றங்களை செய்தார். அதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் 2.5% பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று கூறி புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 45 பில்லியன் வரி குறைப்பு, வீடுகள் மற்றும் தொழில்களுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் விலையை குறைக்க 60 பில்லியன் பௌண்ட் கடன் வாங்குவதாக அறிவித்தார். வருவாய் குறைந்து மீண்டும் பொருளாதார நெருக்கடியே ஏற்பட்டதையடுத்து, தனது பொருளாதார முன்னெடுப்புகள் தவறு என்பதை ஒப்புக்கொண்டு அவரும் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.
இந்நிலையில், கடும் சவால்களுக்கு மத்தியில் பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக். 42 வயதான ரிஷி சுனக், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதியமச்சராக இருந்த அனுபவம் கொண்டவர். முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் எடுத்த பொருளாதார நடவடிகைகளில் சிக்கல் இருப்பதை சுட்டிக்காட்டியவரும் ரிஷி சுனக் தான். அதனால் பிரிட்டன் மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்குரியவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் ரிஷி சுனக் இருக்கிறார்.
இதையும் படிங்க - பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் ராஜினாமா... பதவியேற்று ஆறு வாரங்களேயான நிலையில் அதிரடி முடிவு!!
ஆனால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள ரிஷி சுனக்கிற்கு, ஒரு பிரதமராக கடும் சவால்கள் காத்திருக்கின்றன. அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பார்க்க பிரிட்டன் மட்டுமல்லாது, உலக நாடுகளும் எதிர்நோக்குகின்றன.