சீனா பாகிஸ்தான் கூட்டறிக்கையில் ஜம்மு காஷ்மீர்; இந்தியா கடுமையான கண்டனம்!!

By Dhanalakshmi GFirst Published Nov 4, 2022, 12:57 PM IST
Highlights

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிப் சந்திப்புக்குப் பின்னர் தங்களது கூட்டறிக்கையில் ஜம்மு காஷ்மீர் குறித்து குறிப்பிட்டு இருப்பதற்கு இந்தியா கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிப் இரண்டு நாள் பயணமாக கடந்த புதன் கிழமை சீனா சென்று இருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் பிரதமராக பதவியேற்ற பின்னர் சீனாவுக்கு இது அவரது முதல் பயணமாகும்.  இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்குப் பின்னர் பீஜிங்கில் இருந்து கூட்டறிக்கை வெளியானது. இந்த அறிக்கையில் ஜம்மு காஷ்மீர் குறிப்பிடப்பட்டு இருப்பதற்கு இந்தியா கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி, ''பாகிஸ்தான் சீனா கூட்டறிக்கையில் இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீர் குறித்து குறிப்பிட்டு இருப்பது தேவையில்லாதது. இதுபோன்ற பல தேவையற்ற விஷயங்கள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. அந்த அறிக்கையை நாங்கள் மறுக்கிறோம். 

பாகிஸ்தானில் நடந்த பேரணியில் துப்பாக்கிச் சூடு... முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உள்பட பலர் காயம் என தகவல்!!

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் எப்போதும் இந்தியாவின் அங்கங்களாக உள்ளன. இந்த பிரதேசங்கள் மீது மற்றவர்கள் யாரும் தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. இந்திய இறையாண்மை பகுதிக்குள் சீனா, பாகிஸ்தான் பொருளாதார மண்டலமான பெல்ட் ரோடு அமைத்து வருவதற்கு இந்தியா தனது எதிர்ப்பை, கண்டனத்தை ஏற்கனவே பதிவிட்டுள்ளது. சட்ட விரோதமாக இந்தியப் பகுதிக்குள் பொருளாதார மண்டலத்தை சீனா அமைத்து வருகிறது. இந்திய நிலைப்பாட்டை எந்த வகையிலும், மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து, அவர்களது திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். மூன்றாம் நபரை நுழைப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது, சட்டத்திற்கு எதிரானது'' என்றார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் சந்திப்புக்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ''காஷ்மீர் குறித்து சீனாவிடம் பாகிஸ்தான் விளக்கம் அளித்தது. வரலாற்றில் இருந்து காஷ்மீர் ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் இருதரப்பு சம்மதம் மற்றும் தீர்வுகளின் வாயிலாக அமைதியான வழியில் தீர்வு காண வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.  

Elon Musk Twitter: ட்விட்டர் நிறுவன ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வேலையிலிருந்து நீக்கம்: எலான் மஸ்க் திட்டம்

மேலும் அவர்களது அறிக்கையில், ஆப்கானிஸ்தான் விஷயத்தில் சீனா, பாகிஸ்தான் ஒருங்கிணைந்து செயல்படுவது என்றும், அந்த நாட்டில் பொருளாதார மண்டலத்தை விரிவுபடுத்துவது என்றும் குறிப்பிட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சீன பயணம் மேற்கொண்டு இருந்தபோதும், இந்தியா கடுமையான கண்டனங்களை தெரிவித்து இருந்தது.

ஆசிய நாடுகளின் பகுதிகள் வழியாக, 50 பில்லியன் டாலர் திட்ட செலவில், சீனா பெல்ட் ரோடு அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. இந்த ரோட்டினால் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்படுகிறது என்று தொடர்ந்து இந்தியாவும் பதிவு செய்து வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்  வழியாக இந்த ரோடு அமைக்கப்படுவதுதான் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!