தனித்துவமான செயல் தந்திரங்ககளைக் கொண்டு இருக்கும் இந்தியா, அமெரிக்காவின் நட்பு நாடாக இருக்காது. ஆனால் மிகப்பெரிய சக்தியாக தனித்து செயல்படும். கடந்த 20 ஆண்டுகளில் இருநாடுகளுக்கும் இடையே ஆழ்ந்த வலுவான நீடித்த உறவு இருந்து வருகிறது என்று ஆசிய நாடுகளுக்கான வெள்ளை மாளிகை ஒருங்கிணைப்பாளர் கர்ட் கேம்ப்பெல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற ஆஸ்பென் செக்யூரிட்டி ஃபோரம் கூட்டத்தில் இந்தியா குறித்த கேள்விக்கு கர்ட் கேம்ப்பெல் அவ்வாறு தெரிவித்து இருந்தார். மேலும் அவர் அளித்திருந்த பதிலில், 21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு இந்தியா மிக முக்கியமான இருதரப்பு உறவு நாடாக இருக்கும். உண்மையில், கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் இந்தியாவை விட வேகமாக ஆழமான மற்றும் வலுவான உறவுகளை கொண்ட நாடுகளை நான் பார்த்தில்லை. அமெரிக்கா தனது திறனில் இன்னும் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும். மேலும் தொழில்நுட்பம் மற்றும் பிற விஷயங்களில் இணைந்து செயல்பட வேண்டியது உள்ளது.
"இந்தியா ஒரு தனித்துவ செயல் திறனை கொண்டுள்ளது. அது அமெரிக்காவின் நட்பு நாடாக இருக்காது. அது ஒரு சுதந்திரமான, சக்தி வாய்ந்த நாடாக திகழவே விரும்புகிறது. ஆனால், அதேசமயம் அமெரிக்கா எல்லை தாண்டி, செயல் தந்திரங்களை விரிவாக்கம் செய்து வருகிறது. இரண்டு அதிகார மையங்களிலும் தடைகள் உள்ளன. சவால்களும் உள்ளன. ஆனால், சில லட்சியங்களுக்கு உட்பட்ட உறவு என்பதை நினைத்து அந்த திசையில் பயணிக்க வேண்டும். கல்வி, விண்வெளி, பருவநிலை மாற்றம், தொழில்நுட்பம் எதுவாக இருந்தாலும் இணைந்து செல்ல வேண்டும் என்று அமெரிக்கா கருதுகிறது.
Iran Hijab Protest: ஹிஜாப் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேருக்கு மரண தண்டனை: ஈரான் நீதிமன்றம் தீர்ப்பு
"கடந்த 20 ஆண்டுகளில் கடந்து வந்த தடைகள் மற்றும் இரு தரப்புக்கும் இடையிலான உறவின் ஆழத்தைப் பார்க்கும்போது, அது குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது. இந்தியா, அமெரிக்கா உறவு என்பது சீனாவைச் சுற்றியுள்ள பதற்றத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்படவில்லை. இது இரு சமூகங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்புகளின் முக்கியத்துவத்தைப் பற்றிய ஆழமான புரிதல் ஆகும். அமெரிக்காவில் இருக்கும் இந்திய புலம்பெயர்ந்தோர் இருநாடுகளுக்கும் இடையே சக்தி வாய்ந்த இணைப்புப் பாலமாக இருக்கின்றனர்.
அதிபர் ஜோ பைடனும் அவரது நிர்வாகமும் குவாட் அமைப்பை தலைமை நிலைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தபோது இந்தியர்கள் தெளிவற்ற நிலையில் இருந்தனர். வளங்கள் நிறைந்த பிராந்தியத்தில் சீனாவின் ராணுவ சூழ்ச்சியும், ஆதிக்கமும் அதிகரித்து வரும் நிலையில், சுதந்திரமான, திறந்த மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்பதை இந்தியா, அமெரிக்கா மற்றும் பல உலக வல்லரசுகள் புரிந்து கொண்டுள்ளன.
தைவான், பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் தென் சீனக் கடலை உரிமை கோரி வரும்போது, சீனாவும் தென் சீனக் கடல் பகுதி முழுவதையும் உரிமை கொண்டாடி வருகிறது. தென் சீனக் கடலில் செயற்கைத் தீவுகள் மற்றும் ராணுவ தளவாடங்களை சீனா உருவாக்கியுள்ளது. கிழக்கு சீனக் கடலில் ஜப்பான் உடனும் சீனா பிராந்திய மோதலில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடியிடம் நேரடியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விவாதித்து இருக்கிறார்.
"ஆஸ்திரேலியா பிரதமர் (அந்தோனி) அல்பானீஸ் 2023 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் குவாட் கூட்டத்திற்கு அமெரிக்காவை அழைத்துள்ளார். இது தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தோ-பசிபிக் உடன் மட்டுமின்றி எங்களது ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் விரிவுபடுத்தும் என்று நம்புகிறோம். குவாட் அமைப்பு பல தகவல் தொடர்புகளைக் கொண்டுள்ளது. மேலும் நான்கு முக்கிய கடல்சார் ஜனநாயக நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் ஆழப்படுத்தவும் பாலமாக இருந்தது. குவாட் என்ற அமைப்பு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்டது'' என்றார்.
இதற்கு முன்னதாக, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர், தனது தினசரி செய்தியாளர் சந்திப்பில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு வலுவாக இருப்பதாக தெரிவித்தார்.