போர்சூழலில் உலக அளவில் இதுபோன்று எங்கும் அதிக அளவில் மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்கள், மருந்து கடைகள் உள்ளிட்ட சுகாதார அமைப்புகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவப் படைகள் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. முக்கிய நகரங்களான கீவ், கார்கீவ், மரியுபோல் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் தீவரமடைந்துள்ளன. இதுவரை போர் காரணமாக, 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ரஷ்யாவின் வான்வழி தாக்குதலில், பெரிய பெரிய கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள், கல்விநிறுவனங்கள் உருகுலைந்துள்ளன. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதில், ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கிய நாள் முதல் இன்று வரை அங்குள்ள மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவர்களை குறி வைத்து 70 க்கும் மேற்பட்ட தனிப்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 8 ஆம் தேதி கார்கீவ் நகரிலுள்ள உக்ரைனின் மத்திய மருத்துவமனை ரஷ்யா படையால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதுக்குறித்து தெரிவித்த உக்ரைன் அதிகாரிகள், ரஷ்ய இராணுவத்தின் முதல் தாக்குதலில் மருத்துவமனையின் ஜன்னல்கள் சேதமடைந்தன. பின், இரண்டாம் தாக்குதலில் அறுவை சிகிச்சை அறைகள் அழிக்கப்பட்டன என்று தெரிவித்தார். இதில் இன்னும் கொடுமையாக, தாக்குதல் நடந்தபோது மருத்துவமனையில் பொதுமக்கள், போரில் காயமடைந்த வீரர்கள், கர்ப்பிணிகள், புதிதாக பிறந்த குழந்தைகள் சிகிச்சையில் இருந்ததாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.
போர் தொடங்கியது முதல் உக்ரைனின் நிலவரத்தை கண்காணித்து வரும் உலக சுகாதார அமைப்பு, அங்கு மருத்துவமனைகள், மருந்து கடைகள், சுகாதார அமைப்புகள், ஆம்புலன்ஸ்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 72 தனிப்பட்டத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் பிரதிநிதி ஜார்னோ ஹபிச்ட் சர்வதேச ஊடகமான பிபிசி-யிடம் தெரிவித்துள்ளார்.
ஜெனிவா ஒப்பந்தத்தை மீறி மருத்துவமனைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நவீனப் போரின் யுக்தியாக மாறியுள்ளது என உலக சுகாதாரத் துறை கவலை தெரிவித்துள்ளது. மேலும் உலக அளவில் இந்த அளவிற்கு சுகாதார அமைப்புகள் தாக்கப்படுவதை இதுவரை பார்த்தில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு கருத்து கூறியுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் விரிவுப்படுத்தப்பட்ட ஜெனிவா ஒப்பந்தம், போரின் போது எக்காரணத்திற்காவும் பொதுமக்கள், இராணுவ வீரர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்த கூடாது என்று தெரிவிக்கிறது. இந்த ஒப்பந்தத்தினை ரஷ்யாவும் ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும் இந்த ஒப்பந்தம், பொதுமக்கள், ராணுவ வீரர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. ஆனால், உக்ரைனின் நடக்கும் தாக்குதல்களை பார்க்கும் இவையெல்லாம் மீறப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் மருத்துவமனையின் முன்னால் ராணுவ வீரர்கள் இருந்தாலோ, மருத்துவமனை ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்தாலோ அவை தாக்கப்படலாம் என்று இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே காயமடைந்த வீரரின் கையில் தொடர்பு சாதனம் ஏதும் இருந்து, அவர் அருகில் இருக்கும் பிற படைகளுக்கு தகவல் தரமுடியும் என்பதால் தாக்குதல் நடத்துவது இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நியாப்படுத்தப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.