sri lanka crisis:இலங்கையில் நாளுக்கு நாள் மோசமாகிவரும் பொருளாதாரச் சிக்கலால், அங்கு வெளியாகும் பிரபல நாளேடான “தி ஐலாண்ட்” தனது அச்சுப்பதிப்பை, நியூஸ்பிரி்ன்ட் பற்றாக்குறை காரணமாக நிறுத்தியது.
இலங்கையில் நாளுக்கு நாள் மோசமாகிவரும் பொருளாதாரச் சிக்கலால், அங்கு வெளியாகும் பிரபல நாளேடான “தி ஐலாண்ட்” தனது அச்சுப்பதிப்பை, நியூஸ்பிரி்ன்ட் பற்றாக்குறை காரணமாக நிறுத்தியது.
இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சண்டை நடந்தகாலத்தில் கூட ஒருநாள் கூட தனது அச்சுப்பதிப்பை நிறுத்தாமல் தி ஐலாண்ட் நாளேடு வெளியானது. ஆனால், இப்போது இலங்கையில் நிலவும் பொருளாதாரச் சிக்கல் அதைவிட மோசமாகியிருப்பதால், அச்சுப்பதிப்பை நிறுத்திவிட்டது.
மோசமான நிலை
இலங்கைப் பொருளாதாரம் மிகவும் மோசான நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. அரசின் அன்னியச் செலாவணி குறைந்துவிட்டதால், வெளிநாடுகளில் இருந்து உரங்கள், பூச்சிகொல்லி மருந்துகள், கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய முடியவில்லை. இதனால் உள்நாட்டு மக்களை பாரம்பரிய விவசாயத்துக்கு மாறுமாறு இலங்கை அரசு கட்டாயப்படுத்தியது.
வேறுவழியின்றி இலங்கை விவசாயிகளும் பாரம்பரிய, இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு மிகப்பெரிய இழப்பைச் சந்தித்தனர். இதனால் இலங்கையில் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டு, தானியங்கள்,அரிசி, பருப்பு விலையும் உயரத்தொடங்கியது.
பணவீக்கம்
நாளுக்கு நாள் இலங்கையின் பொருளாதாரம் சரிந்து, கடந்த பிப்ரவரி மாதம் 2,310 கோடி டாலர் அன்னியச் செலாவணி மட்டுமே கையிருப்பு இருந்தது. அமெரிக்கடாலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் மதிப்பும் 275 ரூபாய்க்கும் மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆசியாவிலேயே மிக அதிகபட்சமாக இலங்கையில் பணவீக்கம் 15.1% இருக்கிறது, உணவுப்பணவீக்கம் 25% அதிகரித்துள்ளது என்று இலங்கை அரசு தெரிவிக்கிறது.
காகிதம் வாங்க அரசிடம்போதுமான நிதியில்லாததால், மாணவர்களுக்கான தேர்வைகூட பள்ளிக்கல்வித்துறை ஒத்திவைக்கும் நிலை இலங்கையில் நிலவுகிறது. அடுத்த பருவத்துக்கான புத்தகங்களை அச்சடிக்க காகிதம் இருப்புஇல்லை.அதை வாங்கவும் அரசு செலவிடத்தயாராக இல்லை என்பதால், மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
பதிப்பு நிறுத்தம்
இந்நிலையில் நாளேடுகள் அச்சடிக்கப் பயன்படும் நியூஸ்பிரிண்ட் பற்றாக்குறை காரணமாக பிரபல நாளேடான தி ஐலாந்து தனது அச்சுப்பதிப்பை நிறுத்திவிட்டது.
இது குறித்து தி ஐலாந்து நாளேடு தனது வாசகர்களுக்காக நேற்றைய முன்பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நாங்கள் எங்கள் அச்சுப்பதிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருப்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். நாளேடுகளை அச்சடிக்கப்பயன்படும் நியூஸ்பிரிண்ட் பற்றாக்குறை காரணமாக இந்த முடிவை எடுக்கிறோம். எங்களின் புறச்சூழல் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கிறது என்பதற்கு வருத்தம் தெரிவிக்கிறோம்.
இறக்குமதியில்லை
சனிக்கிழமை(இன்று) முதல் நாங்கள் நாளேடுஅச்சடிக்கமாட்டோம். இது தற்காலிக முடிவுதான். நாங்களும் எங்கள் நாளேட்டின் பக்கங்களை குறைத்து சுருக்கமாக செய்திகளை வழங்கினோம். நாங்கள் நியூஸ்பிரிண்டை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். நாளேடுகளை அச்சடிக்கும் பிளேட், மை ஆகியவையும் இறக்குமதியாகிறது. ஆனால், அன்னியச்செலவாணி பற்றாக்குறை காரணமாக இறக்குமதி செய்யமுடியவி்ல்லை
போரில் கூட நிறுத்தவில்லை
கடந்த 1981ம் ஆண்டு நாளேடு தொடங்கப்பட்டநாளில் இருந்து அரசு விடுமுறை தவிர்த்து மற்ற நாட்களில் நாளேடு அச்சடிப்பு நிறுத்தப்பட்டது கிடையாது. போர் நடந்த காலத்தி்ல்கூட நாளேடு அச்சடிப்பு நிறுத்தப்படவில்லை. கொரோனா காலத்தில் நாளேடுகளை வினியோகம் செய்ய ஆட்கள் யாரும் இல்லை என்பதால் நிறுத்தினோம். அரசின் சார்பில் அளிக்கப்பட்ட தகவலின்படி அடுத்த இரு மாதங்களுக்கு காகிதப்பற்றாக்குறை இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்”எனத் தெரிவித்துள்ளது
நார்வே, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்துதான் இலங்கைக்கு நியூஸ்பிரின்ட் இறக்குமதியாகிறது. இலங்கை அரசிடம் அன்னியசெலவாணிபற்றாக்குறையாக இருப்பதால்,இறக்குமதிக்கான டாலர்களை வாங்க முடியவில்லை.