சர்வதேச நிதியம் 2.9 பில்லியன் டாலர் கடன் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது என இலங்கையின் அதிபர் திங்கட்கிழமை தெரிவித்தார். இது நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான நம்பிக்கையை எழுப்புவதாக உள்ளது.
ஐஎம்எஃப் (IMF) எனப்படும் சர்வதேச நிதியத்தின் குழுவும் இலங்கை அரசுக்கான கடனுக்கு ஒப்புதல் அளித்ததை உறுதிப்படுத்தி இருக்கிறது. இது நிதியை விடுவிப்பது பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளது. இதனைக் கொண்டு இலங்கை அரசு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட நான்கு ஆண்டு திட்டத்தைத் தொடங்குகிறது.
"விவேகமான நிதி மேலாண்மை மற்றும் லட்சிய சீர்திருத்தத் திட்டங்கள் மூலம் மீண்டும் பொருளாதாரத்தை நீண்ட காலத்திற்கு முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்ல நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம். இந்தச் சூழ்நிலையில் சர்வதேச நிதியம் மற்றும் சர்வதேச நட்பு நாடுகள் வழங்கிய ஆதரவிற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்" என அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உடனே ஒரு லட்சம் தேவையா? தனிநபர் கடனுக்கு குறைந்த வட்டி கொடுக்கும் வங்கிகள்
2022ஆம் ஆண்டு இலங்கை அரசு சுதந்திரத்திற்குப் பிறகான மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியது. அந்நியச் செலாவணி கையிருப்பில் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் அந்த ஆண்டு ஏப்ரலில் இலங்கை தனது வெளிநாட்டுக் கடன் பாக்கிகளுக்கான தவணையைத் திருப்பிச் செலுத்தவில்லை.
சுமார் 22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கை மிக அத்தியாவசியமான பொருட்களின் இறக்குமதிகளுக்குக்கூட நிதி ஒதுக்கீடு செய்ய பணமில்லாமல் தவித்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பல சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.
பொருளாதார முறைகேடு, உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளின் கடுமையான தட்டுப்பாடு மற்றும் பணவீக்கம் போன்றவற்றின் பரவலான எதிர்ப்புகளால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார். அவர் நாட்டை விட்டு வெளியேறியதால், அரசியல் மாற்றம் ஏற்பட்டு ரணில் விக்கிரமசிங்கே அதிபரானார். நாட்டின் நிதிப் பற்றாக்குறை காரணமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்குக்கூட நிதி இல்லாத சூழல் உள்ளது. இதனால் மார்ச் மாதம் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட தேர்தல் ஒத்துவைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நிதியம் அளிக்கும் கடன் உதவி நிலைமையைச் சமாளிக்க உதவும் என்று அந்நாட்டு அரசு காத்த்திருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அண்மையில், அதிபர் விக்கிரமசிங்கே, சர்வதேச நிதியம் வழங்கும் 2.9 பில்லியன் டாலர் நிதியின் முதல் தவணை இந்த மாதத்திற்குள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.