
உத்தரப்பிரதேசத்தில் உள்ள காஜிபூர் மாவட்ட கலெக்டரை இடமாற்றம் செய்யாவிட்டால், தனது பதவி ராஜினாமா செய்வேன் என்று முதல்வர் ஆதித்யநாத்துக்கு அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பஹர் மிரட்டல் விடுத்துள்ளார்.
அரசுக்கு மிரட்டல்
உத்தரப்பிரதேச்தில் முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. அந்த அரசில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை அமைச்சராக இருப்பவர் ஒம் பிரகாஷ் ராஜ்பஹர். காஜிபூர் மாவட்ட கலெக்டரிடம் மக்கள் குறைதீர்க்கக் கோரி பல மனுக்கள் அளித்தும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கலெக்டரை இடமாற்றம் செய்யக்கோரி அரசுக்கு ஒம் பிரகாஷ்ராஜ்பஹர் மிரட்டல் விடுத்துள்ளார்.
19 முறை மனு
இது குறித்து அமைச்சர் ஓம் பிரகாஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “நான் காஜிப்பூர்மாவட்ட கலெக்டர் சஞ்சய் குமார் காத்ரியிடம் 19 விஷயங்கள் தொடர்பாக மனு அளித்தேன். ஆனால், எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மக்கள் பிரச்சினைகளையும் கலெக்டர் காது கொடுத்து கேட்பதில்லை.
முறையிட்டும் பலனில்லை
இதையடுத்து கலெக்டரை இடமாற்றம் செய்யக்கோரி முதல்வர் ஆதித்யநாத்தை சந்தித்து முறையிட்ேடன். ஆனால், இதுவரை கலெக்டர் இடமாற்றம் செய்யப்படவில்லை.
பதவியில் இருந்து என்ன பயன்?
என் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், நான் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வேன். அமைச்சராக இருந்து நான் சொன்னதை அரசு நிறைவேற்றாமல் இருக்கும் போது, நான் பதவியில் இருந்து என்ன பயன்?
கலெக்டரை இடமாற்றம் செய்யக்கோரி நான் நாளை(இன்று)தர்ணா போராட்டமும் நடத்த உள்ளேன். முதல்வர் ஆதித்யநாத் டெல்லியில் இருப்பதால் சந்திக்க முடியவில்லை. வந்தவுடன், அவரைச் சந்திப்பேன்.
மக்கள் ஆத்திரம்
இதற்கு முன் கடந்த 25-ந் தேதி பா.ஜனதா அமைப்புச் செயலாளர் சுனில் பன்சாலையும், 27-ந் தேதிமுதல்வரையும் சந்தித்து இது தொடர்பாக பேசினேன்.
ஆனால், எதுவுமே நடக்கவில்லை. வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கையாக நான் நடக்க வேண்டும். தங்களின் கோரிக்கையை கலெக்டர் அலுவலகத்தில் நிறைவேற்றப்படவில்லை என மக்கள் ஆத்திரத்தில் இருக்கிறார்கள்’’ எனத் தெரிவித்தார்.