சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு எவ்வளவு தங்கம் கொண்டு வர முடியும் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோர் இங்கு வசிக்கும் அவர்களது சொந்தங்கள், நண்பர்களுக்கு அங்கிருந்து பல்வேறு பொருட்களை வாங்கி வருவார்கள். குறிப்பாக, தங்கத்தின் மீது உள்ள மோகம் காரணமாக தங்க நகைகளை பலரும் வாங்கி வருகிறார்கள். சில வெளிநாடுகளின் தங்கத்தின் விலை குறைவாக இருப்பதோடு, அதன் தரமும் அதிகமாக இருக்கும் என்பதால், அங்கிருந்து தங்கத்தை வாங்கி வர விரும்புவார்கள்.
அப்படி, தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வருபவர்களுக்கு, தங்கக் கடத்தலை தடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இந்திய சுங்கத்துறை சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி, வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் குறிப்பிட்ட அளவிலான தங்கத்தை மட்டுமே கொண்டு வர முடியும்.
அந்த வகையில், சிங்கப்பூர் தங்கத்துக்கு மவுசு அதிகம் என்பதாலும், தமிழர்கள் உள்பட இந்தியர்கள் ஏராளமானோர் அங்கு வசிப்பதாலும், சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு எவ்வளவு தங்கம் கொண்டு வர முடியும் என்பது குறித்து தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
டெல்லி அருகே முகேஷ் அம்பானி கட்டும் புதிய நகரம்: குவியும் முதலீடுகள்!
சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்திய சுங்கத்துறை தகவலின் அடிப்படையில், ஓராண்டுக்கும் மேல் வெளிநாட்டில் தங்கியிருக்கும் இந்தியர்கள் நாடு திரும்பும்போது தீர்வை இல்லாமல் தங்க நகைகளைக் கொண்டுவர அனுமதிக்கப்படுகிறார்கள். அதன்படி, 20 கிராம் அல்லது ரூ.50,000 மதிப்புள்ள தங்க நகைகளை ஆண்கள் கொண்டு வர முடியும். பெண்களை பொறுத்தவரை 40 கிராம் அல்லது ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வர முடியும். இதுகுறித்த மேல் அதிக தகவல்களுக்கு https://hcisingapore.gov.in/pdf/guide_travelers_to_india.pdf இந்த லிங்கை க்ளிக் செய்து பாருங்கள்.