இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் விமானப்படை தளபதி இஸ்ஸாம் அபு ருபெக் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும், காசா பகுதியை கட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் கடந்த 21 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. தற்போது தரைவழித் தாக்குதலிலும் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு தரைவழித் தாக்குதலுக்கான ஆரம்பக் கட்டப் பணிகளில் ஈடுபட்டு முதல் தாக்குதலை நடத்தி இருந்த இஸ்ரேல் தற்போது தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் விமானப் படைக்கு தளபதியாக இருந்த அபு ருபெக் கொல்லப்பட்டார். இவர் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் டிரோன், ஆள் இல்லா விமானம், பாராகிளைடர்ஸ், விமானப் படை ஆகியவற்றுக்கு பொறுப்பு ஏற்று நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவர்தான் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை திட்டமிட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. அபு ருபெக் தலைமையில் தான் தெற்கு காசா பகுதியில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக அக்டோபர் 14ஆம் தேதி ஹமாஸ் அமைப்பின் விமானப்படையின் மற்றொரு தளபதியான முரத் அபு முரத் இஸ்ரேல் பாதுகாப்புப் படையால் கொல்லப்பட்டு இருந்தார்.
மனிதநேய அடிப்படையில் காசாவில் உடனடியாக போர் நிறுத்தம்: ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
நேற்று இரவு நடந்த தாக்குதலுக்குப் பின்னர் காசா பகுதியில் மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டு, தொலைதொடர்பு சேவைகளும் ரத்தாகி உள்ளது. இன்டர்நெட்டும் முடக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும், இஸ்ரேல் படையினருக்கும் பல கட்ட மோதல் நேற்றிரவு நடந்துள்ளது. ஆனால், இந்த மோதலில் இஸ்ரேல் படையினர் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
காசா ஸ்டிரிப் பகுதியில் சுமார் 150 இடங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை போர் ஜெட்களை இயக்கி தாக்குதலை மேற்கொண்டது. இந்த தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன், அவர்களது சுரங்கப்பாதைகளும் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதுபோன்று 150 சுரங்கப்பாதைகளை குறிவைத்து இஸ்ரேல் படை தாக்குதல் நடத்தியுள்ளது.
காசாவில் இருக்கும் தங்களது ஊழியர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தொடர்ந்து காசா பகுதியில் தாக்குதலை நடத்துவோம் என்றும் தாக்குதலுக்கான பகுதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் இஸ்ரேல் அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு சவாலாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.