குற்றவாளியான சின்னையாவுக்கு 15 முதல் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 16 முதல் 18 பிரம்படி விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு பல்கலைக்கழக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 26 வயது தமிழர் சின்னையாவுக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 12 பிரம்படிகளும் விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர் கடத்தல் மற்றும் திருட்டு போன்ற குற்றச்சாட்டுகளிலும் சிக்கியவர் என்பதால் இந்த தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளது.
துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்த சின்னையா, இரவு நேரத்தில் பல்கலைக்கழக மாணவியை வனப்பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் முகத்திலும் உடலிலும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சந்திக்க வந்த காதலன்கூட அடையாளம் காண முடியாத அளவுக்கு அந்தப் பெண்ணுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
undefined
2019ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி நடந்த சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை நான்கு ஆண்டுகளாக நீடித்துள்ளது. சின்னையாவின் மனநிலை பாதிகப்பட்டவரா என்று உறுதிசெய்யவேண்டிய தேவை இருந்ததுதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
பலாத்காரம் செய்யப்பட்ட பின் வனப்பகுதியில் தனித்து விடப்பட்ட அந்தப் பெண் மிகுந்த சிரமப்பட்டு மொபைல் போனைக் கண்டுபிடித்து தனது நண்பரை தொடர்பு கொண்டு பேசி போலீசாரை அழைத்துள்ளார்.
இந்த வழக்கில் சின்னையா 2019ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளியான சின்னையாவுக்கு 15 முதல் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 16 முதல் 18 பிரம்படி விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில், விசாரணை முடிவில், சிங்கப்பூர் நீதிமன்றம் சின்னையாவுக்கு 12 பிரம்படியுடன் 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது.