உள்நாட்டு போரால் சூடானில் பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நீண்ட காலமாக மோதல் நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து வந்த துணை ராணுவ படையினர் தலைநகர் கர்த்தூமில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்றினர். இதனால் அங்கு ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் வலுப்பெற்றுள்ளது. இருதரப்பிரனரும் மாறி மாறி துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருவதால் சூடான் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. இந்த மோதலில் இதுவரை சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பல நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றி வருவதால் அங்கு தற்காலிகமாக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சூடானில் உள்ள இந்தியர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். சென்னையை சேர்ந்த ஷேக் அப்துல்லா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) சூடானில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவர், சூடானில் உள்ள இந்தியர்களை வெளியேற்ற இந்திய அரசு செய்யும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “ சுமார் 3,000 இந்தியர்கள் சூடானில் உள்ளனர். எங்களை வெளியேற்ற தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் இந்திய தூதரகம் மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க : காங்கிரஸ் வெற்றி பெற்றால் கர்நாடகாவில் கலவரம் ஏற்படும்.. அமித்ஷா பேச்சு..
இந்தியர்கள் அனைவரும் சூடானில் உள்ள கடற்கரை நகரமான போர்ட் சூடான் நகருக்கு மாற்றப்பட்டோம். சூடான் தலைநகர் கார்ட்டூமை சுற்றியே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. கார்ட்டூமில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த போரில் இதுவரை எந்த ஒரு இந்தியரும் காயமடையவில்லை..” என்று தெரிவித்தார்.
கோவையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், சூடானில் 4 ஆண்டுகளாக ஐடி நிபுணராக பணியாற்றி வருகிறார். இதுகுறித்து பேசிய அவர் “ சூடானில் நிலைமை ஆபத்தானதாக உள்ளது. அங்கு தற்போது அத்தியாவசிய பொருட்களின் இருப்பு குறைந்து வருகிறது. விரைவில் சூடானில் உணவு தட்டுப்பாடு ஏற்படலாம். சூடானில் சுமார் 500 தமிழர்கள் ஐடி உள்ளிட்ட பல துறைகளில் பணியாற்றி வருகின்றனர். கார்ட்டூமில் இருந்து போர்ட் சூடானுக்கு செல்ல வழக்கமாக 11 மணி நேரம் ஆகும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை துறைமுக நகருக்கு செல்ல 25 மணி நேரம் ஆனது. சூடானில் தவிக்கும் இந்தியர்களுடன் இந்திய தூதரகம் தொடர்பில் உள்ளது.” என்று தெரிவித்தார்.
சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவதற்காக இந்திய அரசு ‘ஆபரேஷன் காவேரி’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. அதன்படி சூடானில் சிக்கி தவித்த இந்தியர்கள் 278 பேர் முதல்கட்டமாக, சூடானில் இருந்து புறப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Breaking : மே 8-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.