டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய பிறகு, அதை காப்பாற்றுவதற்காக இரவு பகலாக உழைத்து வரும் எலான் மஸ்க், தற்போது கடும் முதுகுவலியால் அவதிபட்டு வருகிறார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து விலைக்கு வாங்கினார். அதை வாங்கியதில் இருந்து எலோன் மஸ்க்கிற்கு தூக்கமே போய்விட்டது. சான் பிரான்சிஸ்கோவில் சமீபத்தில் நடந்த ஒரு வழக்கு விசாரணையின் போது, டுவிட்டர் நிறுவனத்தை முறைப்படுத்தும் பணியில் தூக்கமே போய்விட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். தற்போது அவரது உடல்நிலை சரியாக இல்லை என்றும், நான் நன்றாக இல்லை என்றும் அவர் கூறினார்.
முன்னதாக எலான் மஸ்க் தான் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சினைகள் குறித்தும் புகார் அளித்தார். "நான் நாற்காலியில் அமராமல் அங்குமிங்கும் நடந்து வருவதை நினைத்து வருந்துகிறேன். எனக்கு மிகவும் கடுமையான முதுகுவலி வந்துவிட்டது," என்று குறிப்பிட்டார்.
டுவிட்டரை கையகப்படுத்திய பிறகு, அதை லாபகரமான நிறுவனமாக மாற்ற மஸ்க் பல மாற்றங்களைச் செய்துள்ளார். அவர் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தார், இலவச உணவை வழங்குவதை நிறுத்தினார், மேலும் செலவைக் குறைக்க ட்விட்டர் தலைமையகத்தில் இருக்கும் சமையலறை உபகரணங்கள் மற்றும் பிற பொருட்களையும் விற்றார்.
அதோடு, வாரத்தில் 7 நாட்களும் வேலை செய்வதாகவும், விடுப்பே இல்லாமல் ஒரு நாளைக்கு 17 மணி நேரம் வேலை செய்து வருவதாகவும் எலான் மஸ்க் கூறினார். "தூங்கச் செல்கிறேன், எழுந்திருக்கிறேன், வேலை செய்கிறேன், மறுபடியும் தூங்கப் போகிறேன், எழுந்திருக்கிறேன், வேலை செய்கிறேன் - இப்படியாகவே வாரத்தில் ஏழு நாட்களும் உள்ளன" என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.
டுவிட்டரைப் போல் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதற்கும் விரைவில் கட்டணம்?
இதனிடையே எலான் மஸ்க் அண்மையில் இதுகுறித்து ட்வீட் பதிவிட்டிருந்தார். அதில், "கடந்த 3 மாதங்கள் மிகவும் கடினமாக இருந்தன, அதே நேரத்தில் ட்விட்டரை திவால் ஆவதை தடுக்க நிறைய உழைக்க வேண்டியிருந்தது, அத்தியாவசியமான டெஸ்லா & ஸ்பேஸ்எக்ஸ் பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டியுள்ளது. இதில் நான் அனுபவிக்கும் வேதனையை வேறு யார் மீதும் திணிக்க விரும்பவில்லை." என்று கூறியிருந்தார்.
எலான் மஸ்க் தற்போது 5 நிறுவனங்களை சொந்தமாக்கி நிர்வகித்து வருகிறார். அவை: ட்விட்டர், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், நியூராலிங்க் மற்றும் தி போரிங் நிறுவனம் ஆகும். இவையணைத்தும் நிர்வகிப்பது என்பது கடினமான விஷயம், இருப்பினும் தற்போது டுவிட்டர் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள சட்ட சிக்கலை முழுமுயற்சியாக எலான் மஸ்க் கையாண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.