ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைக்குச் சென்ற தெலங்கானாவைச் சேர்ந்த இளைஞருக்கு அந்நாட்டு லாட்டரியில் 33 கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது.
தெலங்கானா மாநிலத்தில் கரீம் நகர் அருகே இருக்கும் ஜக்தியால் பகுதியைச் சேர்ந்தவர் அஜய் ஓகுலா. 31 வயதாகும் நான்கு ஆண்டுகளுக்கு முன் இவர் வேலைக்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார்.
அந்நாட்டு நகைக்கடையில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். அந்த வேலையில் 3,200 திர்ஹாம், அதாவது சுமார் 70 ஆயிரம் மாதச் சம்பளம் பெற்றுவந்துள்ளார். திடீரென அவருக்கு யோகம் வந்து, கோடீஸ்வரராக மாறியிருக்கிறார்.
அண்மையில் 15 மில்லியன் திர்ஹாம் பரிசுக்கான இரண்டு லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியிருக்கிறார். அதில் ஒன்றில் மூலம் அஜய் ஓகுலாவுக்கு பரிசு விழுந்திருக்கிறது. இதனால் சற்றும் எதிர்பாராத விதமாக ஒரே நாளில் கோடீஸ்வரனாக மாறிவிட்டார். இந்திய மதிப்பில் அவர் பெற்றுள்ள பரிசு ரூ.33,81,25,350.
இந்த அதிர்ஷ்டத்தை இப்போதும் நம்பவே முடியவில்லை என்கிறார் அஜய். “இதைப்பற்றி என் அம்மா மற்றும் குடும்பத்தினரிடம் கூறினேன். அவர்களுக்கும் முதலில் இதை நம்ப முடியவில்லை. இதைப்பற்றி ஊடகங்களில் செய்தி வந்த பின்புதான் நம்பினார்கள்” என்று பூரிப்புடன் கூறுகிறார் அஜய்.
இந்தப் பணத்தை வைத்து முதலில் தன்னுடைய கிராமத்தில் ஒரு வீடு கட்டுவேன் என்று கூறும் அவர், கட்டுமான நிறுவனம் ஒன்றை அமைத்து தொழில் செய்யப்போவதாகச் சொல்கிறார். இந்தப் பணத்தில் ஒரு பகுதியை என் கிராமத்துக்காக செலவு செய்வேன் எனவும் தெரிவிக்கிறார்.
இப்போது அஜய் தன் குடும்பத்தினரை துபாய் வரவழைக்க விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்துள்ளார். அவர்களுக்கு துபாயைச் சுற்றிக் காட்டிவிட்டு பின்புதான் சொந்த ஊருக்குத் திரும்பப் போகிறாராம்.