
அமெரிக்காவின் 45 ஆவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி நடைபெற்றது.
ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று உலகமே எதிர்பார்த்த நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
அதிபர் மாளிகைக்குள் டொனால்டு காலடி எடுத்து வைத்த நாள் முதல், முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா அமல்படுத்தியிருந்த பல்வேறு திட்டங்களுக்கு டிரம்ப் மூடு விழா நடத்தினார். ஒபாமா காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்டவைகள் இப்பட்டியலில் அடங்கும்.
அடுத்ததாக அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை எனும் சித்தாந்தத்தின் அடிப்படையில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஹெச்.1 பி. விசாவில் பல்வேறு அதிரடி மாற்றங்களைப் புகுத்தினார். இதனால் இந்தியர்கள் உள்பட லட்சக்கணக்கான வெளிநாட்டைச் சேர்ந்தவர் பணி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பரம எதிரியாகக் கருதப்பட்ட மெக்ஸிகோவை ஓபாமா நட்பு பாராட்டி பகை உணர்வை குறைத்த நிலையில், ஆட்சி பொறுப்பேற்ற சில நாட்களிலேயே மெக்ஸிகோ எல்லையில் பிரம்மாண்ட தடுப்புச் சுவர் கட்டப்படும் என்று கூறி புதுப்பிக்கப்பட்ட மெக்ஸிகோ நட்புறவில் விரிசல் அடையச் செய்தவர் அதிபர் டொனால்டு டிரம்ப்.
ஆட்சி செயல்பாடுகளில் தான் இந்த அதிரடி மாற்றங்கள் என்றால், டிரம்பின் செயல்பாடுகளும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. பிற நாட்டுத் தலைவர்களுடன் கைகுலுக்குவதில் டிரம்பின் ஆதிக்கம் மெச்சும் படியாக இல்லை. ஜெர்மனி அதிபர் தாமாக முன்வந்து கைகுலுக்க முற்பட்ட போதும், அதனை வேண்டுமென்றே தவிர்த்த அமெரிக்க அதிபரின் செயல், நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளானது.
இதோடு முடிந்ததா...! சவுதி அரேபியாவுக்கு அரசு முறைப்பயணமாக தனது மனைவியுடன் டொனால்டு டிரம்ப் சென்றார். 4 சுவர்களுக்குள் கணவர், அரசு முறைப் பயணத்தில் அவர் அதிபர் என்பதை கிஞ்சிற்றும் சிந்திக்காத மனைவி மெலேனியா, டிரம்பின் கையை தட்டிவிட்டதும் அவருக்கான சறுக்கல்களாகவே பார்க்கப்படுகிறது.
ஒபாமா காப்பீட்டுத் திட்டத்தில் டிரம்பை சுற்றத் தொடங்கிய சர்ச்சை தற்போது பாரீஸ் ஒப்பந்தத்தில் வந்தடைந்துள்ளது. உலகம் மாசடையக் கூடாது என்பதற்காக, சர்வதேச நாடுகளுடன் கைகோர்த்த ஐக்கிய நாடுகள் சபை பாரீஸ் ஒப்பந்தத்தை இயற்றியது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், கரியமில வாயுவின் வெளிப்பாட்டை ஒவ்வொரு நாடும் குறைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இதற்குப் பல நாடுகளும் ஒப்புதல் தெரிவித்துவந்த நிலையில், தற்போது அமெரிக்கா வெளியேறப்போகிறது என்ற தகவல்கள் வெளியாகிவருகின்றன.இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று மாலை அறிவிப்பதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.