Singapore News : தமிழர்கள் மற்றும் இந்தியர்களுக்கு இரண்டாம் தாயகம் என்று சொல்லும் அளவிற்கு பல இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் வாழும் நாடு தான சிங்கப்பூர், அங்கு தீபாவளி திருநாள், இந்தியாவை போலவே வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
இந்நிலையில் வருகின்ற நவம்பர் 9, வியாழன் முதல் நவம்பர் 14, 2023 செவ்வாய் வரையிலான காலப்பகுதியில் உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகளில் மிகவும் கடுமையான போக்குவரத்து எதிர்பார்க்கப்படுகிறது என்று குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
வரவிருக்கும் தீபாவளி திருநாளோடு, நீண்ட வார இறுதி மற்றும் சில மாணவர்களுக்கு ஏற்கனவே ஆண்டு இறுதி பள்ளி விடுமுறைகள் ஆரம்பமாகியிருப்பதே இதற்குக் காரணம் என்றும் ICA வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
பயணிகள் 3 மணி நேரம் காத்திருக்க வாய்ப்பு
அக்டோபர் 6 முதல் 8 வரையிலான சமீபத்திய குழந்தைகள் தின வார இறுதியில், 1.27 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் நிலச் சோதனைச் சாவடிகளைப் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. பெருந்தொற்றுக்கு பிறகு கடந்த 2022ல் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து நிலச் சோதனைச் சாவடிகள் மூலம் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் கடந்து சென்றதை கண்டதாக ICA கூறியது.
புறப்படும் முன் கவனிக்க வேண்டியவை
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் (LTA) ஒன் மோட்டாரிங் இணையதளம் மூலமாகவோ அல்லது புக்கிட் திமா விரைவுச் சாலை மற்றும் அயர் ராஜா விரைவுச் சாலையில் நிறுவப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ்வே கண்காணிப்பு மற்றும் ஆலோசனை அமைப்பு மூலமாகவோ நிலச் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நிலைமையைச் சரிபார்க்கவும் என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ICAன் Facebook மற்றும் Twitter கணக்குகள் மற்றும் Money 89.3, One 91.3, Kiss92, Hao 96.3, UFM 100.3 ஆகியவற்றில் உள்ளூர் ரேடியோ ஒளிபரப்புகள் மூலமாகவும் வாகன ஓட்டிகள் போக்குவரத்துக்கு நிலை குறித்து அப்டேட் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச் சோதனைச் சாவடிகளில் வரிசையில் இருப்பவர்கள், வரிசையை கடந்து செல்வதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது கடுமையான நெரிசலை ஏற்படுத்தும் மற்றும் பிற வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை சீர்குலைக்கும் என்று ICA தெரிவித்துள்ளது.