Narendra Modi : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நேற்று திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடியுடனான பேச்சுவார்த்தையின்போது, காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா தனது அனைத்து திறன்களையும் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இரு தலைவர்களுக்கிடையிலான இந்த பேச்சுவார்த்தையின்போது ஈரானிய ஊடகங்கள் அளித்த தகவலின்படி, மேற்கத்திய காலனித்துவத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டங்களையும், உலகில் அணிசேரா இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக நாட்டின் நிலைப்பாட்டையும் ரைசி நினைவு கூர்ந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
"இன்று, காசாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான சியோனிச குற்றங்களை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா தனது அனைத்து திறன்களையும் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உடனடி போர் நிறுத்தம், தடையை நீக்குதல் மற்றும் காஸாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குதல் போன்ற உலகளாவிய கூட்டு முயற்சிகளை தெஹ்ரான் ஆதரிக்கிறது என்று ஈரான் ஜனாதிபதி மேலும் கூறினார்.
"பாலஸ்தீனிய மக்களின் கொலையின் தொடர்ச்சியானது உலகின் அனைத்து சுதந்திர நாடுகளையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது, மேலும் இந்த கொலையானது பிராந்தியத்திற்கு அப்பாற்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்" என்று அவர் கூறினார். ஒடுக்கப்பட்ட மற்றும் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவது, மருத்துவமனைகள், பள்ளிகள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீதான தாக்குதல்கள் எந்தவொரு மனிதனின் பார்வையில் இருந்தும் "கண்டனத்துக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அவர் மேலும் கூறினார்.
"பாலஸ்தீனிய எதிர்ப்புக் குழுக்களுக்கு அபகரிக்கும் சியோனிச ஆட்சியின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள சட்டப்பூர்வ உரிமை உள்ளது மற்றும் அனைத்து நாடுகளும் அடக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்கான பாலஸ்தீன மக்களின் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்" என்று ஈரானிய நாட்டு அதிபர் ரைசி மேற்கோளிட்டுள்ளார்.
இதற்கிடையில், இந்த உரையாடலின் மற்றொரு பகுதியில், இந்தியாவுடனான உறவுகள் குறித்த தெஹ்ரானின் பார்வையை 'மூலோபாயமானது' என்று ரைசி விவரித்தார், மேலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான திட்டமிடல் மற்றும் இந்தத் துறையில் ஏற்படும் தாமதங்களை ஈடுசெய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
பாலஸ்தீனியர்களுக்குப் பதிலாக ஒரு லட்சம் இந்தியர்களுக்கு உடனடி வேலை! இந்தியாவிடம் இஸ்ரேல் கோரிக்கை
மேலும் இந்த உரையாடலின் போது, பிரதமர் மோடி, விரிவாக்கத்தைத் தடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்குவதை உறுதிசெய்து, பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுக்க வேண்டும் என்றார். சபாஹர் துறைமுகம் உட்பட இருதரப்பு ஒத்துழைப்பில் இந்தியா மற்றும் ஈரானின் முன்னேற்றம் ஆகியவற்றை இரு தலைவர்களும் வரவேற்றனர்.