
சீனாவில் கொரோனா வைரஸின் புதியவகை உருமாற்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் தினசரி பாதிப்பு 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஒமைக்ரான் புதிய வகை
சீனாவில் வெளியாகும் குளோபல் டைம்ஸ் நாளேடு வெளியிட்ட செய்தியில் “ ஷாங்காய் நகரிலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள நகரில் ஒரு கொரோனா நோயாளி உடலில் எடுக்கப்பட்ட மாதிரியில் ஒமைக்ரான் பிஏ.1.1. வைரஸின் உருமாற்றம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒமைக்ரானிலிருந்து உருமாற்றம் அடைந்த வைரஸ், சீனாவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸுடன் ஒத்துப்போகவில்லை. இருப்பினும் உலகளவில் உள்ள அறிவியல் வல்லுநர்கள் கொரோனா வைரஸின் உருமாற்றங்களை தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள்.
13ஆயிரம் பேர் பாதிப்பு
சீனாவில் நேற்று ஒரேநாளில் மட்டும் 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவில் பாதிக்கப்பட்டனர். இதில் பெரும்பாலும் அறிகுறிகள் ஏதும் இல்லாதவர்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
வைரஸ் அதிகமாக இருக்கும் ஷாங்காய் நகருக்கு, துணைப் பிரதமர் சன் சுன்லான் நேற்று வருகை தந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டார். கொரோனா தொற்றை விரைவாக தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டார். வர்த்தக நகரான ஷாங்காயில் சனிக்கிழமை மட்டும் 8ஆயிரம் பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டனர், இதில் 7888 பேருக்கு அறிகுறியில்லாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து நிறுத்தம்
திங்கள்கிழமை முதல் மீண்டும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையை ஷாங்காய் நிர்வாகம் நடத்த உள்ளது
சீனாவில் ஜிலின் நகரில் வைரஸ் பாதிப்பு கடுமையாக இருந்து அங்கு ஊரடங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நகருக்கு துணைப் பிரதமர் சன் சென்று பார்வையிட்டார். ஷாங்காய் நகரில் தற்போது 2.50 கோடிக்கும் அதிகமான மக்கள் லாக்டவுனில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஹாய்னன் மாகாணத்தில் உளள சான்யா நகரில் கொரோனா பரவலைத் தடுக்க அனைத்துவிதமான போக்குவரத்து நடவடிக்கைக்கும் தடைவிதித்துள்ளனர்.