இந்தியாவின் 3-வது மிகப்பெரிய ரயில் விபத்து : உயிரிழந்தவர்களுக்கு உலக தலைவர்கள் இரங்கல்..

By Ramya s  |  First Published Jun 3, 2023, 12:00 PM IST

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உலகம் முழுவதும் இருந்து தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


தைவான் அதிபர் சாய்-இங் வென், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் மற்றும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி ஆகியோர் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தைவான் அதிபர் சாய்-இங் வென் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ இந்தியாவில் நடந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பிரார்த்தனை செய்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் மீட்பு நடவடிக்கைகள் அனைவரையும் காப்பாற்றும் என்று நம்புகிறேன், ”என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos

undefined

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் தனது ட்விட்டர் பதிவில்“ஒடிசாவில் நடந்த சோகம் குறித்து இந்திய மக்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். உங்கள் வலியைப் பகிர்ந்து கொள்கிறோம், பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். எங்களால் முடிந்த உதவிகளை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ரயில் விபத்தின் படங்கள் தனது இதயத்தை உடைத்துவிட்டதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அவரின் பதிவில் “இந்தியாவின் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தின் படங்கள் மற்றும் அறிக்கைகள் என் இதயத்தை உடைக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், இந்த கடினமான நேரத்தில், கனடா நாட்டு மக்கள் இந்திய மக்களுடன் நிற்கிறார்கள், ”என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் “ இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடந்த பேரழிவுகரமான ரயில் விபத்தைத் தொடர்ந்து எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் எண்ணங்கள் காயமடைந்த பலரைப் பற்றியும், அவர்களுக்கு உதவுவதற்காக அவசரகாலப் பணியாளர்கள் பணியாற்றுவது பற்றியும் உள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தனது ட்விட்டர் பதிவில் “ பாலசோரில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா மற்றும் ஒடிசா மக்களுடன் நாங்கள் நிற்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் விபத்துக்குள்ளானதில் 288 பேர் உயிரிழந்தனர், சுமார் 900 பேர் காயமடைந்தனர். இது இந்தியாவில் நடந்த 3-வது மிகப்பெரிய ரயில் விபத்தாக கருதப்படுகிறது. 

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். நேற்றிவு முதல் விடிய விடிய நடந்து வந்த மீட்புப் பணிகள் தற்போது முடிவடைந்து, சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன, விபத்தில் இறந்தவர்களின் அடையாளத்தைக் கண்டறியவும், சிக்கியவர்களை மீட்கவும் அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

click me!