இலங்கையின் ஹம்பாந்தோடா துறைமுகத்தில் சீனாவின் யுவான் வாங் 5 என்ற கப்பலை நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி அளித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இருந்து வரும் கப்பலை, இந்தியாவும் கண்காணித்து வருகிறது.
சீனாவுடன் இலங்கை மீண்டும் நெருக்கம் காட்டுவது இந்தியாவுக்கு சிக்கலாக அமைய இருக்கிறது. தற்போது கடல் வழிமார்க்கமாக இலங்கைக்குள் நுழைந்து, இந்தியாவை வேவு பார்ப்பதற்கு சீனா திட்டமிட்டு இருப்பதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.
பொருளாதாரத்தில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு இலங்கை வீழ்ச்சி கண்டுள்ளது. சர்வதேச நிதி ஆணையத்திடம் இருந்து கடன் வாங்குவதற்கு முடியாமல் திண்டாடி வருகிறது. கடன் பெற்றால், அதை அடைப்பதற்கான வழிகளை இலங்கை கண்டறிய வேண்டும் என்ற நிர்பந்தத்தில் உள்ளது. ஆனால், அதற்கான உள்நாட்டு உற்பத்தியோ, தொழில் வளர்ச்சியோ அந்த நாட்டில் இல்லை. இந்தியா இதுவரை இலங்கைக்கு 3000 கோடிக்கும் அதிகமான நிதிஉதவியை அளித்துள்ளது.
இந்த நிலையில், இலங்கையின் ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் சீனாவின் யுவான் வாங் 5 என்ற கப்பலை நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி அளித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இருந்து வரும் கப்பலை, இந்தியாவும் கண்காணித்து வருகிறது.
sri lanka crisis: இலங்கை பொருளாதார சிக்கலுக்கு கோத்தபய ராஜபக்சே காரணம் இல்லை: ரணில் விக்கிரமசிங்கே
யுவான் யாங் 5 கப்பலின் மகத்துவம்:
இந்த மாதத்தின் (ஆகஸ்ட்) மத்தியில் சீனாவின் கப்பல் இலங்கையின் தெற்கில் இருக்கும் ஹம்பாந்தோடா துறைமுகத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கப்பல் விண்வெளி மற்றும் சாட்டிலைட் ஆய்வில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது. ஜூலை 13ஆம் தேதி சீனாவின் ஜியான்ஜின் துறைமுகத்தில் இருந்து கிழக்கு சீன கடலை கடந்த பின்னர், ஆகஸ்ட் 11ஆம் தேதியில் இருந்து 17 ஆம் தேதிக்குள் இலங்கை துறைமுகத்திற்கு வரும் என்று கூறப்படுகிறது.
இலங்கையின் ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, இந்தியக் கடலின் வடக்கு - மேற்கு பகுதிகளில் விண்வெளி மற்றும் சாட்டிலைட் ஆய்வுகளில் ஈடுபடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. 222 மீட்டர் நீளமும், 25.2 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல் 2007 ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. ஜியாங்ணன் கப்பல் துறைமுகத்தில் இந்தக் கப்பல் கட்டமைக்கப்பட்டுள்ளது.
எதற்காக ஹம்பன்தோட்டாவில் நிறுத்தப்படுகிறது?
இந்த துறைமுகத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக சீனக் கப்பல் நிறுத்தப்படுவதாக இலங்கையின் பாதுகாப்புத்துறைக்கான செய்தி தொடர்பாளர் காலனல் நளின் ஹெராத் தெரிவித்துள்ளார். சீனாவிடம் இருந்து பெரிய அளவில் கடன் பெற்று இந்த துறைமுகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. சீனாவிடம் இருந்து வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை என்ற காரணத்திற்காக இந்த துறைமுகத்தை சீனாவுக்கு இலங்கை குத்தகைக்கு கொடுத்துள்ளது. அதனால்தான், தன்னுடைய ராணுவ பயன்பாட்டிற்காக இந்த துறைமுகத்தை சீனா பயன்படுத்தலாம் என்ற அச்சம் இந்தியாவுக்கு எழுந்துள்ளது.
al zawahiri: Al Qaeda: அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் அடுத்த தலைவர் இவரா?
வழக்கம்போல், இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வர்த்தக மற்றும் கடற்படை கப்பல்களுக்கு இவ்வாறு அனுமதி அளிக்கப்படுகிறது என்று இலங்கை செய்தி தொடர்பாளர் ஹெராத் கூறினாலும், தற்போது சீனாவின் கப்பல் வரவிருப்பதை முதலில் இலங்கை மறைத்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எதற்காக ஹம்பாந்தோட்டாவில் சீன கப்பல் நிற்க வேண்டும். வேறு காரணங்கள் இருக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்தியா ஏன் அச்சப்பட வேண்டும்?
சீனாவின் இந்தக் கப்பல் ராணுவக் கப்பல் இல்லை. ஆனாலும், இதுபோன்ற கப்பல்கள் சீனா அல்லது வேறு நாடுகள் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு இருக்கும்போது, தனது பணியை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
இந்தக் கப்பலால் 750 கிலோ மீட்டர் தொலைவு வரை வேவு பார்க்க முடியும். அதாவது தமிழ்நாட்டின் கல்பாக்கம், கூடங்குளம் மற்றும் இந்திய எல்லையில் இருக்கும் அணு ஆயுதக் கூடங்களை வேவு பார்க்க முடியும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கடற்கரைப் பகுதிகளை நோட்டமிட முடியும். தகவல்களையும் இதனால் சேகரித்துக் கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்து இருக்கும் இலங்கையின் தமிழ் தேசிய கூட்டணி, ''சீன கப்பல் இலங்கைக்கு வருவது, இயற்கையாகவே இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சீன கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கக் கூடாது'' என்று இந்தக் கூட்டணி கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
நாட்டின் மீதான பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியிலான தாக்கங்கள் குறித்து கவனித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி கூறுகையில், ''சீனாவின் கப்பல் வருவது குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதுகுறித்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.
சீனா பதில் என்ன?
இந்தியாவுக்கு பதில் அளிக்கும் வகையில் சீனா அளித்து இருக்கும் விளக்கத்தில், ''சட்டரீதியிலான கடல் சார்ந்த உரிமையில் யாரும் தலையிட முடியாது'' என்று தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு இதுபோல் நடந்ததா?
இதேபோன்று 2022ஆம் ஆண்டில், நான்கு முதல் ஆறு சீன ராணுவக் கப்பல்கள் இந்திய கடல் பகுதியில் காணப்பட்டது. இதற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பை தெரிவித்து கண்டித்து இருந்தது. 2019ஆம் ஆண்டிலும் இதேபோன்று அந்தமான் நிகோபர் பகுதியில் சீனாவின் ஷி யான் 1 கப்பல் வந்து சென்றது, அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது.
மேலும் 2014ஆம் ஆண்டு, அணு ஆயுதங்களை தாங்கிய சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல் கொழும்பு கடல் பகுதிக்கு வந்து இருந்தது. அப்போது இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே இது பதட்டத்தை ஏற்படுத்தி இருந்தது. அப்போது இலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த கோத்தபய ராஜபக்சே டெல்லி வந்திருந்தது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில், மீண்டும் சீன கப்பல் வருகையால் இந்தியா, சீனா இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.