சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பதவியில் இருந்து இறங்குமாறு மக்கள் போர்க் கொடி உயர்த்தி கோஷமிட்டு வருகின்றனர். சீனாவில் அதிபரை பதவியில் இருந்து இறங்குமாறு போராட்டம் நடத்துவது இதுதான் முதல் முறை.
சீனாவில் கொரோனா தொற்று தலைவிரித்தாடி வருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் கொரோனா தொற்று. மக்கள் மருந்து மாத்திரைகள் இல்லாமல், உண்பதற்கு சரியான ஊட்டச் சத்து உணவு இல்லாமல், மருத்துவமனைகளில் நிரம்பி வருகின்றனர். இந்தியா, ஜெர்மன் போன்ற நாடுகள் சீனாவுக்கு மருந்துகள் கொடுத்து உதவி வருகின்றன. ஜீரோ கோவிட் என்ற பெயரில் மக்களை ஜி ஜின்பிங் அரசு வீட்டுக்குள் அடைத்து இருந்தது. ஆனால், இதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தெருவுக்கு வந்து போராடினர். சுதந்திரம் வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
இதன் அடுத்த கட்டமாக, ஜீரோ கோவிட் வாபஸ் பெறப்பட்டது. மக்கள் பொதுவெளிக்கு வந்தனர். கொரோனா தொற்றும் அதிகரித்தது. தற்போது புதிய திரிபு வைரஸ் BF 7 பெரிய அளவில் சீனாவில் பரவி வருகிறது. மக்கள் சரியான மருத்துவம் கிடைக்காமல் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. முதலில் கொரோனா சீனாவில் இருந்துதான் கடந்த 2019ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவியது என்று நமபப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா புதிய திரிபு ஏற்பட்டு உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீன மக்கள் இதனால், அரசுக்கு எதிராக பெரிய அளவில் ஆங்காங்கே போராட்டத்தில் குதித்துள்ளனர். சரியான போதிய நடவடிக்கை எடுக்காத ஜி ஜின்பிங் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் சீனாவில், ஒரு கட்சி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் குரல் எழுப்பி வருகின்றனர். "ஸ்டெப் டவுன் ஜி ஜின்பிங்! ஸ்டெப் டவுன், கம்யூனிஸ்ட் கட்சி' 'நீண்டநாள் ஆட்சியாளர் எங்களுக்கு வேண்டாம், எங்களுக்கு பேரசரர்கள் வேண்டாம்' என்ற குரல் எழுப்பி வருகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலைமை வகிப்பது, ராணுவத்துக்கு தலைமை பொறுப்பு வகிப்பது, அரசுக்கு தலைமை பொறுப்பு வகிப்பது என்று அனைத்து பொறுப்புகளையும் சமீபத்தில் தனது ஆதிக்கத்தின் கீழ் ஜி ஜின்பிங் கொண்டு வந்தார்.
இதுவரை வாய் திறக்காமல் அமைதி காத்து வந்த மக்கள் தற்போது குரல் எழுப்புவதற்கான காரணம் கொரோனா தொற்றுக்கு ஜி ஜின்பிங் அரசால் முற்றுப்புள்ளி வைக்க முடியாததுதான். ஜீரோ கோவிட் தங்களது சுதந்திரத்தை, ஆரோக்கியத்தை, வாழ்வாதாரத்தை பறித்ததாக குற்றம்சாட்டினர். சீனாவிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. போக்குவரத்து கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டு இருந்தது. 70 ஆண்டுகால சீன கம்யூனிஸ்ட் அரசின் கீழ் இல்லாத அளவிற்கு தற்போது மக்கள் போராட்டங்களில் இறங்கி இருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது.
இதற்கு முன்பு கடந்த 1989ஆம் ஆண்டில் தியானன்மென் சதுக்கத்தில் ஜனநாயகம் வேண்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். சீனர்களின் இந்தப் போராட்டம் இன்றளவும் வரலாற்றில் பதிந்து இருக்கிறது. தற்போது பல்வேறு அடக்குமுறைகளை பயன்படுத்தி ஜி ஜின்பிங் ஆட்சி மக்களை ஒடுக்கி வருகிறது. கடுமையான தண்டனைகள் மூலம் தன்னார்வலர்கள், அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் என்று அனைவரும் அடக்குமுறைக்கு உள்ளாகின்றனர். கண்காணிப்பு காரணமாக மக்கள் சமூக வலைதளங்களில் ஜி ஜின்பிங்கை விமர்சிக்க அஞ்சி வந்தனர்.
இதனால் சமீபத்தில் மூன்றாவது முறையாக மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் அதிபராக நீடிப்பதற்கு சட்டங்களை திருத்தியபோதும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டதற்கும், ராணுவத்திற்கு தலைமை ஏற்றத்தையும் யாரும் தட்டிக் கேட்கவில்லை. சீனா என்றால் நினைவுக்கு வருவது மா சே துங், கம்யூனிஸ்ட் தலைவர் என்றாலும் நினைவுக்கு வருபவர் மா சே துங் தான். சீனாவின் அசைக்க முடியாத தலைவராக இருந்தவர். இன்றும் சீனாவின் சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் எழுதப்பட்டவர். இவரையும் மிஞ்சி தனது பெயர் நிலைக்க வேண்டும், பேசப்பட வேண்டும் என்று துணிந்து செயல்பட்டு வருபவர்தான் ஜி ஜின்பிங். ஆனால், இதற்கு நவீன சீனாவும், மக்களும் ஆதரவு நல்கவில்லை.
தற்போது மக்கள் துணிந்து செயல்பட்டு வருகின்றனர். அரசியல் சதியால் ஆட்சி கவிழ்ப்பு நடக்கலாம் என்று கூறப்படுகிறது. பீஜிங்கில் இருக்கும் சிங்குவா பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது கோஷத்தில் ஜனநாயகம், சட்டம், சுதந்திரம் ஆகியவற்றை முன்னிறுத்தி போராட்டம் நடத்தினர். இதேபோன்ற போராட்டம் ஷாங்காய், வுஹான், சங்க்டூ, குவாங்க்சோ ஆகிய இடங்களிலும் வெடித்துள்ளது. தேசிய அளவில் நடந்து வரும் போராட்டம் ஜி ஜின்பிங் மற்றும் அவரது ஆட்சிக்கு தலைவலியாக அமைந்துள்ளது.
போராட்டம் நடத்தி வருபவர்களை சீன அரசாங்கம் கைது செய்து வருகிறது. கைது நடவடிக்கைகளையும், கைது செய்யப்பட்டவர்களையும் சமூக வலைதளங்களிலும் போராட்டக்காரர்கள் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், இவற்றை நீக்குமாறு சீன அரசிடம் இருந்து உத்தரவு பறந்துள்ளது. பெரிய அளவில் அடக்குமுறையை கையாண்டால், நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்பதால் ஜி ஜின்பிங் அரசாங்கம் அமைதிகாப்பதாக கூறப்படுகிறது. சீனாவிடம் இருந்து பரவிய புதிய திரிபு தொற்று இன்று உலக நாடுகளுக்கு மிரட்டலாக உள்ளது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.