டெல்லியில் வரும் செப்டம்பர் மாதம் 9, 10 ஆகிய தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடக்கிறது. இந்த அமைப்பில் இருக்கும் உறுப்பு நாடுகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடக்கவிருக்கும் நிலையில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லை மோதல் மட்டுமின்றி, அருணாசலப் பிரதேச விவகாரத்தில் சிக்கல் தலை தூக்கி இருக்கிறது. சீனா சமீபத்தில் வரைபடம் ஒன்றை அதிகாரபூர்வமாக வெளியிட்டு இருந்தது. அந்த வரைபடத்தில் இந்தியாவுக்கு சொந்தமான அருணாசலப் பிரதேசத்தை தங்களுடன் இணைந்து வெளியிட்டு இருந்தனர். ஜி20 உச்சி மாநாடு நடக்கவிருக்கும் நிலையில், இதுபோன்று சீனா செய்து இருப்பது உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. வரைபடத்தில் அருணாசலப் பிரதேசத்தை காட்டி விட்டால் மட்டுமே, சீனாவுக்கு சொந்தமாகி விடாது என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருணாசலப் பிரதேசத்தை மட்டுமின்றி தைவான் நாட்டையும் தங்களது நாடாக சீன சித்தரித்து வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில் டெல்லியில் நடக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் கலந்து கொள்ளப் போவதில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜி ஜின்பிங்கிற்கு பதிலாக அவர் சார்பில் சீன பிரதமர் லி சியாங் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
ஜி20 உச்சி மாநாடு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி, ஜி ஜின்பிங் சந்திப்பிற்கு ஏற்ற தளமாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், ஜி ஜின்பிங் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்து இருந்தார். அவர் சார்பில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோ கலந்து கொள்ள இருப்பதாக மாஸ்கோ அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே ஜி ஜின்பிங் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை இந்திய அதிகாரி ஒருவர் உறுதி செய்து இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதிபர் தேர்தலில் போட்டியிடும் தர்மன் கையில் அதிர்ஷ்டம் அளிக்கும் தங்கநிற அன்னாசிப் பழம்!
சீன நாட்டின் அதிபராக மூன்றாவது முறை கடந்தாண்டு பொறுப்பேற்று இருக்கும் ஜி ஜின்பிங், கொரோனா பரவல் காரணாமாக வெளிநாடுகளுக்கு செல்வதை குறைத்துக் கொண்டுள்ளார். ஆனால், ஜி 20 மாநாட்டில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான காரணத்தை இன்னும் சீனா தெரிவிக்கவில்லை.
சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.