சீனாவில் கடந்த வாரம் விபத்துக்குள்ளான விமானத்தில் உயிரிழந்த 132 பேரில் இதுவரை 120 பேர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் விமானத்தின் இரண்டாவது கறுப்பு பெட்டியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் தென்மேற்கு மாகாணமான யுன்னான் தலைநகர் குன்மிங்கிலிருந்து தொழில் மையமாக விளங்கும் குவாங்ஜோ நோக்கி சென்ற போயிங் 737 ரக விமானம் 29 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துக்கொண்டிருந்த போது, ஹீஜோ நகரத்துக்கு உள்பட்ட டெங்ஷியான் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. கடந்த மார்ச் 21 ஆம் தேதி உள்ளூர நேரப்படி மதியம் 2.20 மணிக்கு இந்த விபத்தானது நடந்தேறியது.
undefined
இந்த விமானத்தில் 123 பயணிகளும், 9 ஊழியர்களும் பயணம் செய்தனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை, விமானத்தின் முதல் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இரண்டாவது கறுப்பு பெட்டியும் மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இன்னும் விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டாவது கறுப்பு பெட்டி இன்னும் கண்டெடுக்கப்படவில்லை என்று அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் அந்த பகுதி மூன்று பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்டுள்ளதால், நடந்து அல்லது இருசக்கரவாகனத்தில் தான் மீட்பு படையினர் செல்ல முடிகிறது. இச்சூழலில், விமானம் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து சேறுபடிந்த பண பைகள், ஏடிஎம் கார்டுகள், பயணிகளின் அடையாள அட்டைகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன. மேலும் இந்த விமானத்தில் பயணம் செய்த 132 பேரின் ஒருவரை கூட உயிருடன் மீட்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான தரவுகளையும் விமானிகளின் உரையாடலையும் பதிவு செய்யும் கருப்புப் பெட்டியை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மீட்பு பணியில் ட்ரோன் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தின் கறுப்பு பெட்டி கிடைத்தால் மட்டுமே, அதனை ஆய்வு செய்து , விபத்துக்கான காரணத்தை கண்டறிய முடியும். சீனாவில் 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு நிகழும் மிக பெரிய விமான விபத்து என்பதால் , இதில் விரிவான விசாரணை மேற்கொள்ள சீன அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்துவிட்டதாகவும் டிஎன்ஏ பரிசோதனை மூலம் 120 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சீனாவின் சிவில் விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் விபத்துக்குள்ளான போயிங் 737 விமானத்தில் இரண்டாவது கறுப்பு பெட்டியை மீட்டெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.