கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் முதல்முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அலறவிட்டது.
மீண்டும் தலைதூக்கும் கொரோனா :
ஆல்பா, பீட்டா, டெல்டா என்ற கொரோனா அலைகளைத் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் கொரோனா வைரஸை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. சமீபத்தில் தான் ஓமிக்ரான் கொரோனா உலகெங்கும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த கொரோனா வைரஸ் காரணமாகவே உலகின் அனைத்து நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகப் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வேக்சின் பணிகளுக்குப் பின்னர், இப்போது தான் உலக நாடுகள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. அதேநேரம் சீனாவின் பல்வேறு பகுதிகளிலும் இப்போது வைரஸ் பாதிப்பு மீண்டும் உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் அங்குப் பல மாகாணங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் கொரோனா :
தென் ஆப்பிரிக்காவில் 37 லட்சத்து 30 ஆயிரத்து 645 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை ஒரு லட்சத்து 42 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தென் ஆப்பிரிக்கா தொற்று நோய் களுக்கான தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது.கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 கோடியே 10 லட்சத்து 27 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரத்து 262 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 42 கோடியே 56 லட்சத்து 3 ஆயிரத்து 43 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 61 லட்சத்து 74 ஆயிரத்து 339 பேர் உயிரிழந்துள்ளனர்.