இந்தியாவில் இருந்து கனடா தூதரக அதிகாரிகள் அனைவரும் திரும்பப் பெறப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள அந்நாட்டு குடிமக்களுக்கு கனடா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், இந்தியாவில் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். கனடா பிரஜையான அவரது கொலையின் பின்னணியில் இந்திய அரசுக்கான தொடர்புகள் இருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதனால், இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், கனடாவின் குற்றச்சாட்டுக்ளை அபத்தமானது என கூறிய இந்தியா, அந்நாட்டு தூதர்களை இந்தியாவில் இருந்து வெளியேற உத்தரவிட்டது. அதேபோல், கனடாவும் இந்திய தூதர்களை வெளியேற்றியது. இரு நாடுகளும் விசா சேவையையும் நிறுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் பணியாற்றி வந்த 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற்றுள்ளது. இந்தியா விதித்த கெடு முடிவடைந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தூதரக அதிகாரிகளை வெளியேற்ற வேண்டும் என்றும், அவ்வாறு வெளியேற்றப்படாத அதிகாரிகளின் பொறுப்புகள் நீக்கப்படும் என்றும் இந்தியா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்தியாவில் பணியாற்றி வந்த கடனாவின் 41 தூதரக அதிகாரிகளும், 42 உதவியாளர்களும் என அனைவருமே திரும்ப பெறப்பட்டுள்ளனர். இதனால், கனடா தூதரகம் காலியாகியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் உள்ள தனது குடிமக்களுக்கான எச்சரிக்கையுடன் கூடிய பயண அறிவுறுத்தல்களை கனடா புதுப்பித்து வெளியிட்டுள்ளது. “நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல்களின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் அதிக அளவு எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.” என அந்த அறிவுறுத்தலில் கனடா தெரிவித்துள்ளது.
“கனடா மற்றும் இந்தியாவில் சமீபத்திய உறவுகளின் பின்னணியில், பாரம்பரிய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கனடாவுக்கு எதிர்ப்புகள் மற்றும் சில எதிர்மறையான உணர்வுகள் கிளம்பியுள்ளன. கனடா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உட்பட கனேடியர்கள் அச்சுறுத்தல் அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாகலாம். டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில், நீங்கள் அந்நியர்களுடன் விலகி இருக்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது.” என கனடா வெளியிட்டுள்ள பயண அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நமோ பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கு வைத்தார் பிரதமர் மோடி!
மும்பை, சண்டிகர் மற்றும் பெங்களூருவில் உள்ள துணைத் தூதரகங்களில் உள்ள அனைத்து தனிநபர் சேவைகளையும் கனடா இடைநிறுத்தியுள்ளது. இந்த மூன்று நகரங்களில் உள்ள தனது குடிமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கனடா அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து கனேடியர்களும் தங்களுக்கு உதவி தேவைப்பட்டால், டெல்லியில் உள்ள தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
“பிக்பாக்கெட், பர்ஸ் பறிப்பு போன்ற சிறு குற்றங்கள் சகஜம். குற்றவாளிகள் வெளிநாட்டினரை குறிவைக்கலாம், குறிப்பாக முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலாப் பகுதிகளில். எனவே, குடிமக்கள் நெரிசலான இடங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும். பெரிய தொகைகளை எடுத்துச் செல்ல வேண்டாம்.” எனவும் கனடா வெளியிட்டுள்ள பயண அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.