தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை முழுமையாக ஆதரிப்பதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் கடந்த 12 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அத்துடன், இஸ்ரேலுக்கு நேரில் சென்று தங்களது ஆதரவையும் அந்த நாடுகளின் தலைவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், இஸ்ரேலுக்கு நேற்று சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என்றார்.
மேலும், ஹமாஸ் தாக்குதலை எதிர்கொள்ள இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். அத்துடன், காசா மருத்துவமனை மீதான தாக்குதல் விவகாரத்திலும், இஸ்ரேலுக்கு ஆதரவான கருத்தை ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், இரண்டு நாட்கள் பயனமாக இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபர் இசாக் ஹெர்ஜோக் உள்ளிட்டோரை அவர் சந்தித்து பேசியதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து தனது இரங்கலையும் தெரிவித்தார்.
முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் போர் தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ரிஷி சுனக், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்தார்.
காசாவுக்கு 27 டன் மனிதாபிமான உதவிகளை அனுப்பும் ரஷ்யா!
பிரிட்டிஷ் குடிமக்களை வெளியேற்றியதற்கு இஸ்ரேல் பிரதமருக்கு நன்றி தெரிவித்த ரிஷி சுனக், ஹமாஸைப் போலல்லாமல், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க நீங்கள் எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறீர்கள் என்பது தனக்குத் தெரியும் என்றார்.
பாலஸ்தீனியர்களும் ஹமாஸால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். மனிதாபிமான உதவிக்காக நீங்கள் எல்லைப் பகுதிகளை திறந்து விட்டதற்கு மகிழ்ச்சி என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, இஸ்ரேல் வந்திறங்கியதும், “எல்லாவற்றுக்கும் மேலாக, இஸ்ரேலிய மக்களுடன் எனது ஒற்றுமையை வெளிப்படுத்த நான் இங்கு வந்துள்ளேன். நீங்கள் சொல்ல முடியாத பயங்கரமான பயங்கரவாதச் செயலுக்கு ஆளாகியுள்ளீர்கள். பிரிட்டனும், நானும் உங்களுடன் இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறேன்.” என்று ரிஷி சுனக் தெரிவித்தார்.