
ஜனநாயக சோசலிசவாதி ஜோஹ்ரான் மம்தானி, எதிர்பார்ப்புகளுக்கு எதிராக பெரிய வெற்றியைப் பெற்று, நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த வெற்றியின் மூலம் மக்கள் மாற்றத்திற்கும், புதிய அரசியல் பாணிக்கும் வாக்களித்துள்ளனர் என்று மம்தானி வெற்றிக் கொண்டாட்டத்தில் கூறினார்.
மம்தானி தனது போட்டியாளரை குறிவைத்து, “ஒரு அரசியல் வம்சத்தை நாங்கள் தோற்கடித்துள்ளோம்” என்று தெரிவித்தார். பொதுமக்கள், டாக்ஸி ஓட்டுனர்கள், சிறுகடை தொழிலாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட தொழிலாளர் வர்க்க மக்களின் ஆதரவு தான் இந்த வெற்றிக்கு காரணம் என்றார். டாக்ஸி ஓட்டுனர்களின் பிரச்சினைக்காக அவர் எடுத்த உண்ணாவிரத போராட்டத்தையும் நினைவுபடுத்தினார்.
தனது தேர்தல் வாக்குறுதிகளில், வாடகை கட்டுப்பாடு, மலிவு வீடுகள், இலவச & வேகமான பேருந்து சேவை, இலவச குழந்தை பராமரிப்பு, சராசரி உணவு விலைகளைக் கட்டுப்படுத்தும் அரசு அலுவலகக் கடைகள் மற்றும் செல்வந்தர்களுக்கு கூடுதல் வரி ஆகியன இடம்பெற்றன. அவரது பிரச்சாரம் தொழிலாளர் வர்க்க நியூயார்க் மக்களின் தேவைகளை பிரதிபலித்ததாக கூறினார். அவரது வெற்றிக்குப் பின் அமெரிக்க அரசியலில் பெரிய அதிர்வுகள் ஏற்பட்டன.
செனட் சிறுபான்மை தலைவர் சக் ஷூமர், இந்த முடிவு டிரம்ப் அரசியல் நெறிக்கான பெரிய பதிலடி எனக் கூறினார். முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, நியூயார்க், நியூ ஜெர்சி, வர்ஜீனியா போன்ற இடங்களில் ஜனநாயக மக்களின் வெற்றியை வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். “இது பெரிய போராட்டத்தின் தொடக்கம். நம்பிக்கையுடன் முன்னேறுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.