
அமெரிக்காவில் பயங்கரமான விமான விபத்து ஒன்று நடந்துள்ளது. லூய்வில்லே முகமது அலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நொடிகளிலேயே UPS நிறுவனத்தின் சரக்கு விமானம் தீப்பற்றி தரையிறங்கியது. பறந்த உடனேயே ஏற்பட்ட திடீர் கோளாறால் விமானம் தரைமட்டத்தில் மோதி வெடித்துக் கொண்டிருந்ததே இந்த விபத்துக்குக் காரணம். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
UPS நிறுவனத்துக்கு சொந்தமான இந்த MD-11 சரக்கு விமானம் ஹவாய் நோக்கிப் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. அருகாமையில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. தீப்பற்றி எழுந்த கரும்புகை பல கிலோமீட்டர் தூரத்தில் காணப்பட்டதாக கூறுகின்றனர்.
விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக UPS நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த மூவரும் குழு உறுப்பினர்களே என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விபத்து நடந்த உடனேயே லூய்ஸ்வில்லே மெட்ரோ போலீஸ் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணி மேற்கொண்டனர். விபத்து தொடர்பான காரணங்களை கண்டறிய அமெரிக்க விமானப் பாதுகாப்பு ஆணையம் (FAA) மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) இணைந்து விசாரணை நடத்துகின்றன.
கென்டக்கி மாநில ஆளுநர் ஆன்டி பீஷியர் தனது இரங்கலைத் தெரிவித்தார். விபத்தில் குறைந்தது மூவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். விமானத்தில் எரிவாயு மற்றும் வெடிபொருட்கள் இருப்பதால், மீட்பு வேலைகள் இந்த ஆபத்தான சூழலில் தொடர்கின்றன என்றும் எச்சரித்தார்.
உலகில் UPS நிறுவனத்தின் மிகப்பெரிய சரக்கு மையமாகக் கருதப்படும் இந்த விமான நிலையத்தில் தினமும் சுமார் 2 மில்லியன் பார்சல்கள் செயல்படுத்தப்படுகின்றன. 12,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இங்கு பணியாற்றுகின்றனர். அங்கு ஏற்பட்ட விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.