
ஆஸ்திரேலியாவில் உள்ள வீடுகளுக்கு, தினமும் குறைந்தது மூன்று மணிநேர இலவச சூரிய சக்தியை வழங்கும் புதிய எரிசக்தி சேமிப்புத் திட்டத்தை ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. வீட்டில் சூரிய சக்தி தகடுகள் (Solar Panels) இல்லாதவர்களுக்குக் கூட இத்திட்டத்தில் பலன் பெறலாம்.
இந்த 'சோலார் ஷேரர்' (Solar Sharer) திட்டம் 2026-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வரும் என்று எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்
இந்தத் திட்டத்தின் கீழ், சூரிய சக்தி உற்பத்தி மிகவும் அதிகமாக இருக்கும் மதிய வேளைகளில் பயனர்கள் இலவச மின்சாரத்தைப் பெறுவார்கள்.
இந்தத் திட்டம் குறித்துப் பேசிய அமைச்சர் போவன், "இலவச மின்சாரம் கிடைக்கும் நேரத்தில் தங்கள் அதிகபட்ச மின்சாரப் பயன்பாட்டை மாற்றிக்கொள்ளும் மக்கள், இதன் மூலம் நேரடியாகப் பயனடைவார்கள். அவர்கள் சோலார் தகடுகள் வைத்திருந்தாலும் இல்லாவிட்டாலும், வாடகை வீட்டில் இருந்தாலும் சொந்த வீட்டில் இருந்தாலும் இதில் பலன் அடையலாம். அதிகமான மக்கள் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொண்டால் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் செலவு குறையும். இதனால் அமைப்பு ரீதியாக பெரிய நன்மைகள் கிடைக்கும்," என்று கூறினார்.
'சோலார் ஷேரர்' திட்டம் ஆரம்பத்தில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களிலும், தென்கிழக்கு குயின்ஸ்லாந்திலும் தொடங்கப்பட்டு, பின்னர் மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
ஆஸ்திரேலியாவில் சுமார் நாற்பது லட்சம் வீடுகளில் கூரை மீது சூரிய சக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. அதிகபட்ச சூரிய ஒளி இருக்கும் மதிய வேளைகளில் மின் உற்பத்தி மிக அதிகமாக இருப்பதால், சில சமயங்களில் மின்சார விலை பூஜ்யத்துக்கும் குறைவாக மாறும் நிலை உள்ளது. ஆனால், அதிகபட்ச மின் தேவை பெரும்பாலும் சில மணிநேரம் கழித்து ஏற்படுவதால், மின் விநியோக அமைப்பில் (Grid) சுமை ஏற்படுகிறது.
இந்தத் திட்டம் வீடுகள் தங்கள் அதிகப்படியான மின் பயன்பாட்டை மதிய நேரத்திற்கு மாற்றுவதன் மூலம், அதிக அளவில் உற்பத்தியாகும் சூரிய சக்தியைப் பயன்படுத்தவும், மின் விநியோக அமைப்பில் ஏற்படும் சுமையைக் குறைக்கவும் உதவுகிறது. அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் உட்பட, தங்கள் சொந்த சோலார் தகடுகள் இல்லாத வீடுகளும் இந்தத் திட்டத்தில் சேர முடியும்.
இலவச மின்சாரச் சலுகையைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், தங்கள் வீட்டில் ஸ்மார்ட் மீட்டர் (Smart Meter) வைத்திருப்பது அவசியம். மேலும், தங்கள் அதிகபட்ச மின் பயன்பாட்டை மதிய நேரத்தில் மேற்கொண்டால் மட்டுமே இத்திட்டத்தின் பலனைப் பெற முடியும்.
ஆஸ்திரேலியா அரசு, 2030ஆம் ஆண்டுக்குள் 82% புதுப்பிக்கத்தக்க மின்சார பயன்பாட்டுக்கு மாற இலக்கு நிர்ணயித்துள்ளது. முன்னதாக, 2005ஆம் ஆண்டைவிட 43% கார்பன் உமிழ்வைக் குறைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.