உலகமே தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வரும் நிலையில், சீனா இந்த நேரத்தை தனது அண்டை நாடுகளை அச்சுறுத்துவதற்கு பயன்படுத்தியது என்றும், அதன் செயல்களை தாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உலகமே தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வரும் நிலையில், சீனா இந்த நேரத்தை தனது அண்டை நாடுகளை அச்சுறுத்துவதற்கு பயன்படுத்தியது என்றும், அதன் செயல்களை தாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகத்தில் பனிப்போர் நீடித்து வருகிறது. இது கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு இரு நாட்டுக்கும் இடையே பகையாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவின் வூபே மாகாணம் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உள்ளது. இந்த வைரசால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை உலக அளவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 50 லட்சத்தை நெருங்கியுள்ளது. கிட்டத்தட்ட இந்த வைரஸால் 213 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே இந்த வைரசால் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்த வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தின் எதிரொலியாக அமெரிக்காவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் நிலைகுலைந்து போயுள்ளது. இதனால் அமெரிக்காவின் ஒட்டுமொத்த கோபமும் சீனா மீது திரும்பியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீனாவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். உலக அளவில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புக்கு சீனாதான் பொறுப்பேற்க வேண்டும் எனவும், சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் வைரஸ் கசிந்தது எனவும், சீனா இதை திட்டமிட்டு செய்ததாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். இந்நிலையில் சீனாவுக்கு எதிராக அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, காட்டமாக பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில், உலக நாடுகள் தொற்று நோயை எதிர்த்து போராடி வரும் நிலையில், சீனா அதை சட்டவிரோதமாக பயன்படுத்திக் கொண்டது. இந்த நெருக்கடியான நேரத்தை சீனா தனது அண்டை நாடுகளை அச்சுறுத்துவதற்கு பயன்படுத்தியது. இது ஒரு கடினமான நேரம், இந்த நேரத்தில் சீனா மற்ற நாடுகளுக்கு உதவ முன்வந்து இருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை.
இந்த நேரத்தைப் பயன்படுத்தி அது சதி வேலைகளில் ஈடுபட்டது. தென் சீன கடல் தொடங்கி, கிழக்கு வரை பிராந்தியங்களின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதில் சீனா மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. உடனே சீனா இந்த போக்கில் இருந்து விலக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இது தொடர்பாக அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஒவ்வொரு நாடும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நேரமிது, இத்தகைய சூழ்நிலையில் ஒவ்வொரு நாடும் ஒன்று சேர வேண்டும். சீனா தரப்பிலிருந்து ஒத்துழைப்பை விரும்புகிறேன், ஆனால் அதை தவறாக பயன்படுத்த அவர்கள் சதி செய்கிறார்கள். சீனா சர்வதேச சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும், இந்த தொற்று நோய் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. சீனாவே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இந்த நோயின் தாக்கம் குறித்து சீனா உண்மைகளை உலகிற்கு தெரிவிக்கவில்லை என அவர் சரமாரியாக குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்துள்ளார்.