
ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் பயங்கரவாதி நேற்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர்.
மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூரில் உள்ள சகி மசூதியில் நேற்று ஷியா பிரிவினரின் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்புத் தொழுகைக்காக அங்கு ஏராளமானோர் கூடியிருந்தனர்.
அப்போது, அங்கு நுழைந்த பயங்கரவாதி ஒருவன் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினான். இதில், பொதுமக்கள் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30 க்கும் மேற்பட்டோர்படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் அந்த பயங்கரவாதி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எந்தஒரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.
இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.