வர்த்தக ரீதியாக அமெரிக்காவை இந்தியா நன்றாக நடத்தவில்லை , வரும் நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ளதால் இந்தியாவுடன் பெரிய ஒப்பந்தங்கள் ஏதும் கையெழுத்து ஆகாது என தெரிவித்துள்ளார்
உலக அளவில் இறக்குமதிக்கு அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார் . கடுமையான வரிவிதிப்பின் மூலம் இந்தியா பல ஆண்டுகளாக அமெரிக்காவுக்கு நெருக்கடி தந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார் . ஒரு சில தினங்களில் இந்தியா வர உள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இந்தியாவுடன் அமெரிக்கா நண்பனும் அல்ல எதிரியும் அல்ல என்ற விதத்தில் பழகி வருகிறது , ஆனால் அமெரிக்காவை தங்களுக்கு சாதகமாக வைத்துக் கொள்ள வேண்டும் என இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது . அதன் ஒரு ஒரு பகுதியாக ட்ரம்பை இந்தியாவிற்கு அழைத்து உபசரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது .
இந்தியாவின் அழைப்பை ஏற்று அதிபர் டொனால்டு டிரம்ப் வரும் 24 , 25 ஆகிய தேதிகளில் 2 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வர உள்ளார் . அமெரிக்க அதிபராக பதவியேற்ற அவர் முதன் முறையாக இந்தியா வர உள்ளார் . அவரின் இந்தப் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது . அவரின் இந்த பயணத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே பல கோடி மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்நிலையில் நேற்று முன்தினம் பேட்டியளித்த ட்ரம்ப் வர்த்தகம் தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் இந்தியாவுடன் நடைபெறாது என திட்டவட்டமாக மறுத்துள்ளார் . வர்த்தக ரீதியாக அமெரிக்காவை இந்தியா நன்றாக நடத்தவில்லை , வரும் நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ளதால் இந்தியாவுடன் பெரிய ஒப்பந்தங்கள் ஏதும் கையெழுத்து ஆகாது என தெரிவித்துள்ளார் . இதற்கிடையில் , மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்திய குடியுரிமை சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடு போன்ற சட்டங்கள் இஸ்லாமியர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என அமெரிக்கா அறிக்கை வெளியிட்டு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது .
இந்நிலையில் இந்தியா வர்த்தக ரீதியாக அமெரிக்காவை நன்றாக நடத்தவில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளது , இந்தியாவிற்கு ஒருவித அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இந்நிலையில் ட்ரம்பின் கருத்து குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார், அதிபர் டிரம்ப் எதைப் பற்றி குறிப்பிட்டார் என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும் , இருதரப்பு வர்த்தக சமநிலையின்மையை அவர் குறிப்பிட்டார் என்று விளக்கம் அளித்தார் . அதிபர் ட்ரம்பின் பயணம் மூலம் இரு தரப்பு உறவு மேலும் பலப்படும் , ட்ரம்ப் - மோடி சந்திப்பின்போது எச்1பி விசா தொடர்பாக விவாதிக்க வாய்ப்புள்ளது இந்தியாவரவுள்ள அவர் புதுடெல்லி மற்றும் குஜராத் , அகமதாபாத் நகருக்குச் செல்கிறார் . பிரதமர் மோடியுடன் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளும் அவர் மக்கள்முன் உரையாற்றுகிறார் என்றார் .