கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே சீனாவின் வுஹானில் இயங்கிவரும் அதிபயங்கர வைரஸ் ஆய்வுக்கூடம் குறித்து தங்களுக்கு தகவல்கள் கிடைத்ததாக அமெரிக்க உளவு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் , கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் ஹூபே மாகாணம் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது , இதில் 120 க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன , இத்தாலி , ஸ்பெயின் , பிரான்ஸ் , அமெரிக்கா , இங்கிலாந்து , ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . இதுவரையில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது . இதுவரையில் இங்கு 6 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்துள்ளது ஆகஸ்ட் மாதம் வரை அமெரிக்காவில் கொரோனா தாக்கம் இருக்கும் என்றும் ஆகஸ்டு இறுதிக்குள் அமெரிக்காவில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை எட்ட வாய்ப்பிருக்கிறது என்றும் அமெரிக்காவின் சுகாதார அளவீட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது .
உலக வல்லரசான அமெரிக்கா இந்த வைரசை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் திணறி வருகிறது , ஒருபுறம் உயிரிழப்புகள் மறுபுறம் பொருளாதார சரிவு என தினம் தினம் கொரோனாவுடன் போராடி வரும் நிலையில் அமெரிக்காவின் ஒட்டுமொத்த கோபமும் சீனாவின் மீது திரும்பியுள்ளது . சீனாவில் வுஹானில் இந்த வைரஸ் தோன்றியபோதே ஏன் உலகநாடுகளுக்கு இதை அறிவிக்கவில்லை , இதை உலக சுகாதார நிறுவனம் எப்படி தவற விட்டது என கோபக்கணைகளை தொடுத்து வரும் அமெரிக்கா , இந்த வைரஸ் சீனாவில் செயல்பட்டு வரும் வுஹான் ஆய்வுக் கூடத்திலிருந்து பரப்பப்பட்ட ஒன்று என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது . அதே நேரத்தில் இந்த வைரஸ் சீனாவால் உலக நாடுகளின் மீது தொடுக்கப்பட்டுள்ள போர் என்றும் அமெரிக்கா குற்றஞ்சாட்டுயுள்ளது. ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ள சீனா இந்த வைரஸ் இயற்கையான ஒன்று , இதற்கும் வுஹான் வைராலஜி ஆய்வுக்கூடத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என மறுத்தது . இதற்கிடையில் பல உலக நாடுகள் ஆரம்பத்தில் சீனாவில் மீது சந்தேகத்தை வெளிபடுத்திய நிலையில், இது மனிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல, இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவி ஒன்று என விஞ்ஞானிகள் தெளிவு படுத்தினர்.
ஆனால் அதற்கும் போதுமான சாட்சியங்கள் இல்லை , இந்நிலையில் தொடர்ந்து அமெரிக்காவில் உயிரிழப்புகள் நடந்துவரும் நிலையில் , மீண்டும் அமெரிக்கா சீனாவை குற்றம்சாட்ட தொடங்கியுள்ளது, ஆம் இந்நிலையில் மீண்டும் அமெரிக்க அதிகாரிகள் சீனாவின் மீது திடீர் புகார் ஒன்றை வைத்துள்ளனர். அதாவது, கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு உளவுப்பிரிவு அதிகாரிகள் , சீனாவின் வுஹானில் இயங்கிவரும் வுஹான் இன்ஸ்டியூட் ஆப் வைராலஜி ஆய்வுக்கூடம் குறித்து தங்களுக்கு முக்கிய தகவல்களை அளிப்பியதாகவும், அதில் , வுஹான் இன்ஸ்டியூட் ஆஃப் வைராலஜி ஆய்வுகூடத்தில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் கிருமிகள் குறித்து ஆய்வு நடந்து வருவதுடன், அங்கு சார்ஸ், மெர்ஸ், போன்ற கொடிய தொற்று நோய்களை உருவாக்கக்கூடிய வைரஸ் கிருமிகளை அடைத்து வைத்திருப்பதாகவும் தகவல் கிடைத்தது . அதுமட்டுமின்றி அந்த ஆய்வகத்தில் பாதுகாப்பற்ற முறையில் ஆய்வுகள் நடந்து வருவதால் கிருமிகள் மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்துமாறு சீனாவுக்கு அறுவுறுத்தும்படி எச்சரித்தனர்.
எனவே தங்களுக்கு கிடைத்த அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து ஆராய்ந்ததில் , கொரோனா இயற்கையாக உருவானது அல்ல , இது வுஹான் வைராலஹி ஆய்வு கூடத்தில் இருந்து கசியவிடப்பட்ட ஒரு கிருமி ஒன்று என சந்தேகிக்கத் தோன்றுகிறது என தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அதிபர் ட்ரம்பின் ஆட்சியின் கீழ் செயல்படும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என நியுயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது, இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள, பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆராய்ச்சி விஞ்ஞானி சியாவோ கியாங், சீனாவில் செயல்பட்டு வரும் வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிக் கூடம் குறித்து ஏற்கனவே ஒரு வித கவலை இருந்து வந்தது , அதேபோல் அதன் அருகிலுள்ள வுஹான் மத்திய நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு ஆய்வகம் குறித்து இதே போன்ற கவலைகள் உள்ளன, என சியாவோ கூறினார். இந்நிலையில் WIV இன் ஆராய்ச்சி திட்டத்தின் தலைவரான ஷி ஜெங்லியும், ஆய்வகத்தின் பிற விஞ்ஞானிகளும் கொரோனா வைரஸ் ஆய்வு கூடத்தில் இருந்து கசியவில்லை என மறுத்துள்ளார். ஆனால் சீனா இந்த வைரஸ் குறித்து கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில் அளிக்க வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடதக்கது.