தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா ?-முடியாதா ? பாகிஸ்தானுக்கு மிரட்டல் விடுத்த அமெரிக்கா !!

By Selvanayagam PFirst Published Feb 27, 2019, 10:31 AM IST
Highlights

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகள் மீது  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்  மைக் பாம்பியோ எச்சரித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. 

நேற்று  அதிகாலை இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசின. இதில் பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது.

இந்த பதிலடி தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில் இந்திய விமானப்படையினர், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது நடத்திய தாக்குதலையடுத்து, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடன் பேசினேன். அப்போது, பிராந்திய பாதுகாப்பு மற்றும் நாட்டின் அமைதியை பராமரிப்பது தொடர்பாக அவரிடம் எடுத்துரைத்தேன்.

இதேபோல் பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர்  குரேஷியிடம் பேசினேன். அவரிடம், பாகிஸ்தானில் உள்ள அனைத்து  பயங்கரவாத அமைப்புகள் மீதும் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தேன். 

இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கையை தவிர்த்துவிட்டு, நேரடியாக பேச்சுவாத்தை நடத்தி இந்த விவகாரத்தில் சுமூகமான தீர்வை கொண்டு வர வேண்டும் என இரு நாடுகளின் அமைச்சர்களிடமும் வலியுறுத்தி உள்ளேன் என தெரிவித்தார்..

click me!