தற்போது அமெரிக்காவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.
சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 210 நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 19 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவை அடுத்து தற்போது அமெரிக்காவில் தான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது.
தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 5 லட்சத்து 86 ஆயிரத்து 941 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரேநாளில் மட்டும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஆயிரத்து 535 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்பை பார்த்து அச்சத்தில் உறைந்துள்ள அமெரிக்கர்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க கூட கடைகளுக்கு செல்ல அஞ்சுகின்றனர்.
இதனால் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலமாக வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக அமேசான் நிறுவனத்திற்கு மற்ற நாட்களில் வரும் ஆர்டர்களை விட, கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆர்டர்கள் குவிகிறதாம். அதிக அளவில் குவியும் ஆர்டர்களை சரியான நேரத்தில் டெலிவரி செய்வதற்காக கடந்த மாதம் தான் அமேசான் நிறுவனம் 1 லட்சம் பேரை பணியில் அமர்த்தியதாம்.
தற்போது அமெரிக்காவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர். முற்றிலும் ஆன்லைன் டெலிவரியை மட்டுமே நம்பியிருக்கின்றனர். அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆன்லைன் நிறுவனமான அமேசானுக்கு தான் பெரும்பாலான ஆர்டர்கள் குவிகின்றன. இதனால் மேலும் 75 ஆயிரம் பேரை டேலிவரி பணிக்கு சேர்ந்த அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். தற்போது கொரோனாவால் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு அமேசான் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.