இந்நிலையில் அரசு படைகள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதலில் இனி ஈடுபட மாட்டோம் என எழுத்து மூலம் உத்தரவாதம் அளிப்பவர்கள் மட்டுமே விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கனிஸ்தான் சிறையிலுள்ள சுமார் 1,500 தாலிபன்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என அதிபர் அஸ்ரப் கானி அறிவித்துள்ளார் , அமெரிக்கா , ஆப்கானிஸ்தான் , தாலிபன்கள் இடையே நடந்த அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். கடந்த 18 ஆண்டுகாலமாக ஆப்கானிஸ்தானில் ஆப்கன் அரசு படைக்கும் தாலிபன் களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தது . இந்நிலையில் தாலிபன்களுக்கும் அமெரிக்க ராணுவத்தின் உதவியுடன் செயல்படும் அரசு படைகளுக்கும் இடையே தொடர்ந்து கடும் சண்டை நடைபெற்று வந்தது . இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் .
இந்நிலையில் போரை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது , இதில் அமெரிக்கா மற்றும் தாலிபன்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு ஆப்கனிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற ஒப்புக்கொண்டது . இந்நிலையில் ஆப்கன் அரசும் , தாலிபன் பயங்கரவாதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி நிலையான அமைதியை ஏற்படுத்த அதிபர் அஸ்ரப் கானி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் .
இரண்டாவது முறையாக மீண்டும் அதிபர் பொருப்பேற்ற அவர் இரண்டு பக்க உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார் , அதில் நாட்டில் அமைதி ஏற்படுத்த சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 1500 தாலிபன் தீவிரவாதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவித்தார் . அமைதி ஒப்பந்தத்தின்போது சிறையிலுள்ள தாலிபன்களை விடுவிக்க வேண்டுமென தாலிபன்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது . அதன்படி ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ள நிலையில் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி சிறையில் இருந்த தீவிரவாதிகளை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் அரசு படைகள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதலில் இனி ஈடுபட மாட்டோம் என எழுத்து மூலம் உத்தரவாதம் அளிப்பவர்கள் மட்டுமே விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இன்னும் நான்கு நாட்களில் இந்த நடவடிக்கை தொடரும் என்றும் நாளொன்றுக்கு 100 தாலிபன் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் 15 நாட்களில் 1500 பேர் விடுதலை ஆவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது .
இப்பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அமைதி திரும்பும்பட்சத்தில் ஒவ்வொரு வாரத்திலும் 500 பேர் வீதம் மொத்தத்தில் ஐந்தாயிரம் தாலிபன்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது இதனிடையே ஆப்கானிஸ்தானில் உள்ள மொத்தம் 15 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களில் 8000 பேர் முதற்கட்டமாக ஆப்கனில் இருந்து வெளியேறி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.