அடுத்து வரும் வாரங்களில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மற்றும் வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.
கொரோனா உலக அளவிலான ஒரு தொற்று நோய் எனவும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்ககூடும் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது . இது சர்வதேச கொள்ளைநோய் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது கிட்டத்தட்ட நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் இதன் தாக்கம் உள்ளது. சீனாவில் மட்டும் இந்த வைரசுக்கு 3,318 பேர் உயிரிழந்துள்ளனர் . சுமார் 85 ஆயிரம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் .
சர்வதேச அளவில் 4,291 பேர் உயிரிழந்துள்ளனர் , மேலும் ஒரு லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்நிலையில் இந்த வைரஸ் தாக்குதலை உலக தொற்றுநோயாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது . அதேபோல் இது ஒரு கொள்ளை நோய் என்றும் அது கூறியுள்ளது . இதுகுறித்து சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரா அதானம் கேப்ரியேசஸ் , சீனாவுக்கு வெளியே உள்ள நாடுகளில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது.
அதேபோல் கொரோனா வைரஸ் பரவும் நாடுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது . அடுத்து வரும் வாரங்களில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மற்றும் வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றார் . அதேபோல் வைரஸ் பரவல் மற்றும் அதன் தீவிரத்தன்மை மிகவும் அபாயகரமானதாக உள்ளது என்ற அவர், இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டாதது மிகுந்த கவலை அளிக்கிறது என்றார்.