ரஷ்யாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும், கால்பந்தாட்ட போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21-வது உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் ரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதல் காலிறுதிப் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பிரான்ஸ் - உருகுவே அணிகள் மோதுகின்றன.
கால்பந்தாட்ட போட்டி காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்து ரசிகர்கள் ரஷ்யாவில் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில் ரஷ்யாவின் கிழக்கு முனையில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில் இன்று அதிகாலை 1.40 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவாகியது.
இந்த நிலநடுக்கத்தால், அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை; சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
உலக கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் இருந்து வெகு தொலைவில் கம்சட்கா தீபகற்பம் அமைந்துள்ளதால் போட்டிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.