காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே தலிபான்களால் பெரும் சித்திரவதைக்கு ஆட்பட்டு வரும் ஆப்கன் மக்கள் இந்த வெடிகுண்டு தாக்குதலால் பெரும் அச்சத்திலும்,
காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே தலிபான்களால் பெரும் சித்திரவதைக்கு ஆட்பட்டு வரும் ஆப்கன் மக்கள் இந்த வெடிகுண்டு தாக்குதலால் பெரும் அச்சத்திலும், பீதியிலும் ஆழ்ந்துள்ளனர். அமெரிக்கப் படை வெளியேற்றத்தை தொடர்ந்து ஆப்கனிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஒரு 31ம் தேதிக்கு பின்னர் ஆட்சி அமைப்பதற்கான வேலைகளில் தலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். தலிபான்களின் ஆட்சியில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதாலும், அந்நாட்டை விட்டு வெளியேற ஆயிரக்கணக்கான மக்கள் காபுல் விமான நிலையத்தில் முகாமிட்டு வருகின்றனர்.
பொது மக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் உரிய பாதுகாப்பு மக்களுக்கு வழங்கப்படும் என தொடர்ந்து தலிபான்கள் கூறி வந்தாலும், அவர்களின் பேச்சை மக்கள் நம்ப தயாராக இல்லை. இந்நிலையில் ஏற்கனவே விமான நிலையத்திற்கு வரும் மக்கள் மீது தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவம் மனதை விட்டு நீங்குவதற்குள்,அங்கு ஒரு கொடூர சம்பவத்தை தீவிரவாதிகள் அரங்கேற்றியுள்ளனர். காபூல் விமான நிலையத்தில் மக்கள் அணி அணியாக திரண்டு வருவதால் அந்த இடம் குறி வைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காபூல் விமான நிலையம் அருகே தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக ஏற்கனவே பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து எச்சரித்து வந்தன.
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு மிக மோசமாக இருப்பதால், மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். இதன் எதிரொலியாக ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் காபுலுக்கு விமானங்களை அனுப்புவதை நிறுத்தின. இந்நிலையில் நேற்று இரவு சர்வதேச விமான நிலையம் அருகே, மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்க வீரர்கள் 13 பேர் உட்பட பொதுமக்கள் 47 பேர் என இதுவரை மொத்தம் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. ஏற்கனவே தலிபான்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி வரும் ஆப்கன் மக்களுக்கு, இந்த வெடிகுண்டு தாக்குதல் மிகப்பெரிய பீதியையும் உயிர் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இதை செய்திருக்க கூடும் என சந்தேகப்படுவதாகவும் தலிபான்களை காட்டிலும் இவர்கள் கொடூரமானவர்கள் என பல நாடுகள் எச்சரித்துள்ளன. ஆப்கனை குறிவைத்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என நம்புவதாகவும், தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் முஜாகித் கூறியுள்ளார். ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாதிகள் ஆப்கனை தீவிரவாத தாக்குதல் தளமாக பயன்படுத்துவதை தலிபான்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.